அனுமன் தாகம் தீர்த்த அருள்குமரன்


அனுமன் தாகம் தீர்த்த அருள்குமரன்
x
தினத்தந்தி 29 Jun 2021 2:45 PM GMT (Updated: 29 Jun 2021 2:45 PM GMT)

கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப்பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது.

கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப்பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட திருக்கோவில் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது.

தல வரலாறு

ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறைவைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக, ராவணனுடன் போர் புரிந்தார், ராமபிரான். அவருக்கு பக்க பலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக் கொண்டு வருவதற்காக, ஜாம்பவானால் அனுப்பிவைக்கப்பட்டார், அனுமன்.

மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் அனுமன். வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது இங்கே அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான முருகப்பெருமான், தன்னுடைய வேல் கொண்டு ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தல வரலாறு சொல்கிறது. அனுமன் தாகம் தீர்க்கப்பட்ட தீர்த்தம் என்பதால், இது ‘அனுமக்குமரர் தீர்த்தம் என்றும், இந்த இடத்திற்கு ‘அனுமார்வாவி’ என்றும் பெயர் வந்தது. அனுமார்வாவி என்பதுதான், நாளடைவில் மருவி ‘அனுவாவி’ என்றானதாக சொல்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் இருந்த தாமரைத் தடாகம் என்ற ஊரில் இருந்த ஜமீன்தார் ஒருவர், மலைப்பாதை அமைத்து இந்தக் கோவிலுக்கு உற்சவ மூர்த்திகளை செய்து கொடுத்தார். இத்தலத்துக்கு கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரில் அமைந்த விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து, ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும், மற்றொன்றில் இருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அந்த வேரானது, அனுவாவியில் இருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர் என்பதையும் கண்டறிந்தார். ‘விண்ணாவரங் கொடி’, ‘விண்ணாடும் கொடி’ என்று பெயர் பெற்ற அக்கொடி, அனுவாவி தல விருட்சமான மாமரத்தில் படர்ந்திருப்பதை இன்றும் பார்க்க முடியும்.

1957-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த இறைவனும், சில மரங்களும் காணாமல் போயின. வெள்ளத்தின் உக்கிரத்தை வென்று நின்றது, தற்போதைய தலவிருட்சமான மாமரம் மட்டுமே. பின்னர் இறைவன் திருவருளால், தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின் புதிய கோவில் அமைக்கப்பட்டு 1969-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் கோவிலை அடைய 500 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மலை ஏறினால் முருகன் அருள்பாலிக்கும் ஆலயத்தை அடையலாம்.

மலைக்கோவிலுக்கு முன்பாக இடும்பன் சன்னிதி உள்ளது. கருவறையில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியும் உள்ளது. அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும் அருள்புரிகிறார்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வந்து இந்த ஆலயத்தில் உள்ள முருகனை வழிபடுகிறார்கள். இங்குள்ள தீர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக வந்து தொடர்ந்து சில நாட்கள் குளித்து வந்தால், மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.

அமைவிடம்

கோயம்புத்தூர் அருகே உள்ள உக்கடத்திற்கு அடுத்ததாக இந்த அனுவாவி கோவில் இருக்கிறது. ஆனைகட்டி செல்லும் வழி இதன் அருகில்தான் உள்ளது. அனுவாவி மலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் மருதமலை முருகன் கோவிலை அடையலாம்.

Next Story