பக்தியை முடிவு செய்வது இறை நம்பிக்கையே..


பக்தியை முடிவு செய்வது இறை நம்பிக்கையே..
x
தினத்தந்தி 30 Jun 2021 4:51 PM GMT (Updated: 30 Jun 2021 4:51 PM GMT)

தொழிலாளி தன்னுடைய செருப்பு கடையின் ஓரத்தில், இறைவனின் படத்தை வைத்து, அதை தினமும் வணங்கி வந்தார்.

ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரரும், செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே இறைவனை வழிபடுவதை வழக்கமாக வைத் திருந்தனர். வழிபடுவதில்தான் அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது.

தொழிலாளி தன்னுடைய செருப்பு கடையின் ஓரத்தில், இறைவனின் படத்தை வைத்து, அதை தினமும் வணங்கி வந்தார். அவரிடம் பணம் இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியும், மன அமைதியும் இருந்தது.

செல்வந்தரோ தினமும் காலையில் நீராடிவிட்டு, பல மணி நேரம் பூஜையில் ஈடுபடுவார். ஆனால் பல தலைமுறைக்கு அவரிடம் சொத்து இருந்தாலும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர், மகாவிஷ்ணுவிடம் “பெருமாளே... அந்த செல்வந்தர் பல மணி நேரம் பூஜை செய்கிறார். உங்களை வழிபடுகிறார். பக்திமானாக இருக்கிறார். ஆனால் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதே நேரம் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் உங்களுடைய படத்தை வைத்து ஒரு முறைதான் வணங்குகிறார். இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்கு மகாவிஷ்ணு, “நாரதரே.. நீங்கள் உடனடியாக பூலோகம் செல்லுங்கள். அங்கு செல்வந்தரை சந்தித்து ‘நான் நாராயணரிடம் இருந்து வருகிறேன்’ என்று சொல்லுங்கள். அவர் ‘இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக் கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணர் தற்போது, ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொணடிருக்கிறார்’ என்று சொல்ல வேண்டும். அதற்கு செல்வந்தர் என்ன பதில் சொல்கிறார் என்று அறிந்து கொண்டு வாருங்கள். மேலும் செல்வந்தரைப் போலவே, அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடமும் சென்று அதே போல் கூறி, அவரும் என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டு இங்கே வாருங்கள். உங்கள் கேள்விக்கான பதிலை சொல்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.

நாரதர் விரைந்து சென்று, செல்வந்தரை சந்தித்தார். அவரைப் பார்த்த செல்வந்தர், “நீங்கள் யார்?” என்று கேட்க, “நான் நாராயணரிடம் இருந்து வருகிறேன்” என்று நாரதர் பதிலளித்தார்.

உடனே அந்த செல்வந்தர், “இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நாரதர், பெருமாள் சொல்லி அனுப்பியது போலவே, “நாராயணர், ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

அதைக் கேட்ட செல்வந்தர், “அது எப்படி முடியும்?. இதெல்லாம் நடக்கிற காரியமா?” என்று நாரதரிடம் கேட்டார்.

அங்கிருந்து மறைந்த நாரதர், தொழிலாளியைப் போய் பார்த்தார். தான் யார் என்று கேட்ட தொழிலாளியிடமும், “நான் நாராயணரிடம் இருந்து வருகிறேன்” என்று பதிலளித்தார், நாரதர்.

தொழிலாளியும், “இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக்கிறார்” என்று கேட்க, நாரதரோ “அவர் ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

அதைக் கேட்டதும் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, ஒரு நிமிடம் கண்ணை மூடி இறைவனை வணங்கி விட்டு, “இதில் என்ன விந்தை இருக்கிறது? ஒரு பெரிய ஆல மரத்தை சின்ன விதைக்குள் அடக்கி வைத்திருப்பவர், இந்த பிரபஞ்சத்தையே, தன்னுடைய வாய்க்குள் காட்டியவர், அவரால் யானையை ஊசியின் காதுக்குள் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்றார்.

அங்கிருந்து புறப்பட்ட நாரதர், நேராக மகாவிஷ்ணுவிடம் வந்து, செல்வந்தரும், தொழிலாளியும் சொன்ன பதில்களை கூறினார்.

ஸ்ரீமன் நாராயணனான மகாவிஷ்ணு இப்போது நாரதருக்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கினார். “கடவுளை வணங்குவதால் மன அமைதி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடவுள் பக்தி என்பது எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த சூட்சுமம் அடங்கியிருக்கிறது. பக்தி என்பது வெறும் பூஜைகளை செய்வது மட்டுமே அல்ல. அது இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன் பற்றிக்கொள்வது. செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் அந்த இறை நம்பிக்கை இருப்பதே, அவரது மன நிம்மதிக்காக காரணம்” என்று முடித்தார்.

Next Story