சுந்தரர் மீது கோபம் கொண்ட கலிக்காமர் - 2-7-2021 அன்று கலிக்காம நாயனார் குரு பூஜை


சுந்தரர் மீது கோபம் கொண்ட கலிக்காமர் - 2-7-2021 அன்று கலிக்காம நாயனார் குரு பூஜை
x
தினத்தந்தி 30 Jun 2021 5:00 PM GMT (Updated: 30 Jun 2021 5:00 PM GMT)

சோழர்களின் படையில் தலைமை தாங்கும் பொறுப்பை வகித்து வந்தவர்கள், ஏயர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த குலத்தின் வழி வந்தவர்களில், பெருமங்கலத்தைச் சேர்ந்த கலிக்காமரும் ஒருவர். இவரும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்தார். அதோடு சிவ பக்தி மிகுந்தவராகவும் இருந்தார். இவர் நாயன்மார்களில் ஒருவரான, மானக்கஞ்சாற நாயனாரின் மகளை திருமணம் செய்து இல்லறம் நடத்தி வந்தார். எப்போதும் சிவனையே சிந்தித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு, அவரது அடியவர்களின் மீதும் அளவற்ற அன்பு இருந்தது.

ஒரு முறை ஈசனின் அடியாரில் ஒருவரான சுந்தரரை, வெறுக்கும் சூழ்நிலை கலிக்காமருக்கு ஏற்பட்டது. கலிக்காமர் வாழ்ந்த காலகட்டத்தில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனக்காக சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தூது போகும்படி கேட்ட நிகழ்வு நடந்தது. இந்தச் செய்தியை அறிந்ததும் கலிக்காமர் பெரும் கோபம் கொண்டார்.

‘தன் சுயநலத்துக்காக இறைவனை தூது போகச் சொல்லும் சுந்தரர் எல்லாம் அடியாருக்கு அழகு சேர்ப்பவரா?.. இறைவனின் திருவடிகள் நோகும் அளவுக்கு, இப்படி திருவீதிகளில் அலையவிட்டுவிட்டாரே.. சிவபெருமான் தன் தோழனுக்காக இதைச் செய்ய முன்வந்தாலும், அதை அடியாரான சுந்தரர் தடுத்திருக்க வேண்டாமா? எவ்வளவு பெரிய பாவத்தை சுந்தரர் செய்துவிட்டார்’ என்று நினைத்து வருந்தினார், அதோடு சுந்தரரை வெறுக்கவும் செய்தார்.

கலிக்காமரின் கோபத்தைப் பற்றி அறிந்த சுந்தரர், தன்னுடைய செய்கைக்காக மனம் வருந்தினார். ஒரு அடியவரின் துயரத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே. அதோடு இறைவனை நம்முடைய சுயநலத்திற்காக பயன்படுத்திவிட்டாமே என்று கலங்கிப் போனார். தன் பிழையை பொறுத்தருளும்படி இறைவனை வேண்டிக்கொண்டார்.

தன்னுடைய இரண்டு பக்தர்களும் மன வருத்தத்துடன் இருப்பதை மாற்றி, அவர்கள் இருவரையும் இணைக்க ஈசன் நினைத்தார். இதற்காக கலிக்காமருக்கு, சூலை நோயைக் கொடுத்தார். நோயின் வீரியம் தாங்காமல், கலிக்காமர் இறைவனை வேண்டினார். அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. “உன் துன்பத்தை நீக்கும் வல்லமை படைத்தவன் சுந்தரமூர்த்தி மட்டுமே” என்றது அந்தக் குரல்.

அதேநேரம் சுந்தரரின் கனவில் தோன்றிய ஈசன், “என்னுடைய ஏவலால், கலிக்காமன் சூலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி உதவு” என்று கூறினார்.

கலிக்காமருடன் நட்பு ஏற்படுத்த கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதிய சுந்தரர், பெருமங்கலம் புறப்பட்டார். அந்தச் செய்தி கலிக்காமருக்கு சொல்லப்பட்டது. ஆனால் அவரோ, ‘இறைவனையே ஏவல் பணி செய்ய வைத்தவர், என் நோயை தீர்ப்பதை விட நான் இறப்பதே மேல்’ என்று கருதி, தன்னுடைய வாள் கொண்டு வயிற்றை கிழித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த நிலையில் சுந்தரர், பெருமங்கலம் வந்துவிட்டதை கலிக்காமரின் மனைவி அறிந்தார். அவர், தனது துயரத்தையும், கணவரின் செயலையும் மறைத்து, சுந்தரரை இன்முகத்துடன் வரவேற்க எண்ணினார். தன் எண்ணப்படியே செய்யவும் செய்தார். வீட்டை அலங்கரித்து வைத்து சுந்தரருக்காக காத்திருந்தார்.

சுந்தரர் தன்னுடைய அன்பர் களுடன் கலிக்காமரின் இல்லத்தில் எழுந்தருளினார். அதன்பிறகுதான் நடந்த விஷயங்கள் அவருக்கு தெரியவந்தது. பதறிப்போன சுந்தரர், “இறைவா! இது என்ன சோதனை. கலிக்காமரின் இந்த முடிவை பார்த்த பிறகு, நானும் உயிர்வாழ விரும்பவில்லை” என்று கூறியபடி, அங்கு கிடந்த உடைவாளை எடுத்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.

அப்போது சிவபெருமானின் திருவருளால், கலிக்காம நாயனார் உயிர்பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். சுந்தரரை தடுத்து நிறுத்தி, “ஐயனே! இதென்ன முடிவு. இறைவன் மீதான உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் நான்தான் பிழை செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சுந்தரரிடம் வேண்டினார்.

சுந்தரர், சிவபெருமானின் திருவருளை எண்ணி மனம் மகிழ்ந்தார். கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிக்கொண்டார்.

Next Story