திட்டை திருத்தலத்தின் சிறப்புகள்


திட்டை திருத்தலத்தின் சிறப்புகள்
x
தினத்தந்தி 6 July 2021 5:22 PM GMT (Updated: 6 July 2021 5:22 PM GMT)

திட்டை திருத்தலத்தின் சிறப்பு களைப் பற்றி சிறு குறிப்பாக பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது, வசிஷ்டேஸ்வரர் கோவில். இது குரு தலமாக விளங்குகிறது. இங்கு வசிஷ்டேஸ்வரர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளிள் திருநாமம் உலகநாயகி அம்மை என்பதாகும். குருவிற்கு தனிச் சன்னிதி கொண்ட இந்த ஆலயத்தில், குருப்பெயர்ச்சி நேரத்தில் நடைபெறும் வழிபாடு பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்பு களைப் பற்றி சிறு குறிப்பாக பார்க்கலாம்.

* கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு காலங்களும் இணைந்தது ஒரு மகாயுகம் என்றும், ஒவ்வொரு மகா யுகத்தின் போதும் இந்த பிரபஞ்சம் பிரளயத்தின் காரணமாக அழிவை சந்தித்து மீண்டும் மறுஉருவாக்கம் பெறும் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அப்படி ஒரு மகா யுகத்தின் முடிவில் இந்த பூமி வெள்ளப்பெருக்கால் அழிவை சந்தித்தது. அப்போது பூமியில் ஒரு பகுதி மட்டும் வெள்ளத்தில் மூழ்காமல் திட்டாக நின்றது. இறைவனின் ஆசிகள் நிறைந்த அந்த திருத்தலமே, ‘தென்குடித் திட்டை’ என்கிறது இந்த ஆலய வரலாறு.

* பரம்பொருள் ஒருவரே என்பது பரவலான கருத்து. அந்தப் பரம்பொருளான இறைவன், தன்னில் இருந்து ஒரு பகுதியை பிரித்து, உமாதேவியை படைத்தார். அந்த அன்னையை, தனக்கு நிகரான சக்தியாக உருவாக்கினார். இதை நினைவுறுத்தும் வகையில் திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான, உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு மேல் விதானத்தில் 12 ராசிக்கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக் காரர்கள், தங்கள் ராசியின் கீழ் நின்று அம்பாளை வழிபட்டால், அவர்களின் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

* பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்கும் வேளையில் பார்வதியுடன் இணைந்து செயல்பட்டார், ஈஸ்வரன். அண்டங்களைப் படைத்து அவற்றை பரிபாலனம் செய்ய மும்மூர்த்தி களான ருத்ரன், விஷ்ணு, பிரம்மன் ஆகியோர் படைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் பெரு வெள்ளத்தால் மூடி பேரிருள் நிறைந்திருந்த இந்த பிரபஞ்சத்தைப் பார்த்து பயந்தனர். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, திட்டை பகுதியை அடைந்து, இறைவனை வேண்டினர். சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். அவர் உடுக்கையில் இருந்து எழுந்த மந்திர ஒலிகள், மூவரின் மனதையும் அமைதிப்படுத்தியது. மேலும் அவர்களின் மாயையை நீக்கி, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வதற்கு உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார். அது நிகழ்ந்த அதிசயத் தலமாக திட்டை உள்ளது.

* தட்சனின் மகள்களான 27 நட்சத்திரப் பெண்களை, சந்திரன் மணந்தான். அவர்களில் ரோகிணி மீது மட்டும் சந்திரன் அதிக பாசம் காட்டியதால், தட்சனின் சாபத்திற்கு ஆளானான். அந்த சாபத்தால் தேயும் நிலைக்கு தள்ளப்பட்டான். இதையடுத்து திங்களூர் வந்த சந்திரன், அங்கு கயிலாசநாதரை வழிபட்டான். இதையடுத்து மூன்றாம் பிறையாக தன்னுடைய சிரசில் சந்திரனை ஈசன் அணிந்து கொண்டார். இதையடுத்து சந்திரனின் சாபம் நீங்கியது. இதற்காக திட்டையில் வந்து சந்திரன் நன்றிக் கடன் செலுத்துவதாக தல வரலாறு சொல்கிறது. அது எப்படி என்றால், திட்டை வசிஷ்டேஸ்வரர் சன்னிதியின் விமானத்தில் சந்திர காந்தக் கல்லாக சந்திரன் வீற்றிருக்கிறாராம். அதன் மூலமாக காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகை (24 நிமிடம்)க்கு ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனுக்கு தினமும் அபிஷேகம் செய்கிறாராம். இந்த அதிசயத்தை இந்த ஆலயத்தில் இன்றும் நாம் காண முடியும்.

* சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரம், ‘நமசிவாய.’ அந்த எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம்தான், சிவலிங்க வழிபாடு. திட்டை ஆலயத்தின் மூலவராக, வசிஷ்ட முனிவர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். இவரை சுற்றிலும் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே இது பஞ்ச லிங்க தலமாகவும் திகழ்கிறது.

* பொதுவாக ஒரு ஆலயத்தில் மூலவராக இருக்கும் தெய்வம் மட்டுமே சிறப்புகள் நிறைந்து காணப்படும். ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவிலில், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய 6 தெய்வங்களும் தனித் தனியாக அற்புதங்கள் நிறைந்ததாகவும், வழிபாட்டுக்குரியதாகவும் விளங்குகின்றன. எனவே சிவன் மட்டுமல்லாது மற்றவர்களும் மூலவர்களைப் போலவே அருள்புரிகிறார்கள்.

* ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட பைரவர், பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். அதன் ஒருபகுதியாக திட்டைக்கு வந்து தங்கியிருந்து வசிஷ்டேஸ்வரை வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. மேலும் ‘இந்த ஆலயத்தின் கால பைரவராக எழுந்தருளி அருளும்படி’ பைரவருக்கு வசிஷ்டேஸ்வரர் அனுமதியளித்தார். எனவே இது காலபைரவ ஷேத்திரமாகவும் திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

* நவக்கிரகங்களில், சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர், குரு பகவான். இவர் இந்த ஆலயத்தில் வசிஷ்டேஸ்வரருக்கும், உலகநாயகி அம்மைக்கும் நடுவில் சன்னிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இப்படி ராஜ குருவாக வீற்றிருக்கும் அவரை குருப்பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனை செய்து வழிபட்டால், வேண்டிய நன்மைகள் கிடைக்கும்.

Next Story