நினைத்ததை நிறைவேற்றும் வைகுண்டவாசப் பெருமாள்


நினைத்ததை நிறைவேற்றும் வைகுண்டவாசப் பெருமாள்
x
தினத்தந்தி 2 Aug 2021 7:31 PM GMT (Updated: 2021-08-03T01:01:19+05:30)

பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது, இளங்காடு என்ற சிற்றூர். இங்கு பூமிநீளா உடனாய வைகுண்டவாசப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே இருந்ததாக வரலாற்று சான்றுகள் சொல்கின்றன.

அந்த காலத்தில் இக்கோவில் ஷேத்திர விசேஷமாகத் திகழ்ந்திருக்கிறது. இத்தலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் வைகுண்டவாசப் பெருமாள், அமர்ந்த கோலத்தில் 7½ அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். அருகில் பூமிநீளா தாயார் இருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் சமணம், சாக்கியம் மற்றும் சைவ மதங்களை பின்பற்றி, பின்னர் வைணவத்தின் பால் ஈர்க்கப்பட்ட திருமழிசை ஆழ்வார், இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். அதே போல் அகோபில மடத்தின் 7-வது பட்டம் ஜீயரான மகாதேசிகன், இந்த ஊரில் பிறந்து இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

செஞ்சி அரசவையின் ராஜகுருவாக விளங்கிய சேஷாத்திரியாச்சாரியார், இங்கு அக்ர ஹாரம் அமைத்து தன் வாரிசுகளை குடியமர்த்தியுள்ளார். அப்போதிருந்த அரசர், வைகுண்டவாசப் பெருமாளின் கோவில் நிர்வாகத்தையும், கோவில் முதல் மரியாதை யையும் சேஷாத்திரியாச்சாரியாரிடம் ஒப்படைத்துள்ளார். இன்றளவும் அந்த பரம்பரையினரே நிர்வாகம் செய்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் இந்த ஊர் அக்ரஹாரத்தில் பெரிய மகான்கள் வாழ்ந்திருக்கின்றனர். அப் போதெல்லாம் இங்கு எந்நேரமும் வேதகோஷங் களும், யாக முழக்கங்களும் கேட்டபடியே இருக்குமாம். இந்த ஊர் அந்த காலத்தில் பிரசித்தி பெற்ற நகரமாகவும் இருந்துள்ளது.

இந்தக் கோவிலில் பார்வேட்டை, தேசிகன் சாற்றுமுறை, நவராத்திரி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத பாராயணம், கிருஷ்ண ஜெயந்தி போன்ற உற்சவங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்திருக்கின்றன. தற்போது போதிய புனரமைப்பு இல்லாத காரணத்தால், தினசரி தீபாராதனை ஒரு வேளை மட்டும் நடைபெற்று வருகிறது.

இத்தல பெருமாளை வழிபாடு செய்வதன் மூலமாக நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Next Story