ஆன்மிகம்

ஆன்மீகம்: கடன்பட்ட இருவர் + "||" + Spirituality: Two persons in debt

ஆன்மீகம்: கடன்பட்ட இருவர்

ஆன்மீகம்: கடன்பட்ட இருவர்
பரிசேயருள் ஒருவர், இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது.
உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட, படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார், இவள் பாவியாயிற்றே’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.

பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன், இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

பரிசேயர் அளித்த விருந்தில் நடந்த காரியங்களும் இயேசு கூறிய உவமையும் நமக்குப் பாடமாக அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. சீமோனைப் போலவே, நாமும் நம்மை நேர்மையாளர் என்று நினைப்பதால், நாம் செய்யும் தர்மகாரியங்களில்கூட அன்பைவிட, தற்பெருமையே மேலோங்கி நிற்கிறது.

இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், பரிசேயரைப் போலவே, வழிபாட்டுச் சடங்குகளை மட்டும் நாம் செய்கிறோம். இயேசு நம் அருகில் உணவுக்காகவும், கால்கள் கழுவப்படவும், ஏங்கித் தவிப்பவராக நிற்கிறார். இயேசுவின் கால்களைக் கழுவிய பெண்ணைப்போல், நாமும் எளியோரின் துன்பத்தை துடைக்க வேண்டும். நம் தர்மங்களைத் தாழ்மையுடனும், தம்பட்டம் அடிக்காமலும் செய்யவேண்டும். தீர்ப்பு நாளில், இயேசு நம்மை சுட்டிக்காட்டி, ‘இவரைப் பார்த்தீரா, என் காலடிகளைத் துடைத்தார். இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்’ என்று அறிவிப்பார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்மீகம்: திருமண அழைப்பும்.. விருந்தும்..
இயேசு எருசலேம் கோவிலில் பரி சேயரையும், மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும், மக்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது, “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
2. ஆன்மீகம்: வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் இயற்றிய ‘திருமந்திரம்’ நூல், ஒரு ஒப்பற்ற மெய்யியல் நூலாகும். சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.