வினை தீர்க்கும் விநாயகர்


வினை தீர்க்கும் விநாயகர்
x
தினத்தந்தி 6 Sep 2021 4:42 PM GMT (Updated: 6 Sep 2021 4:42 PM GMT)

‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தையே தன்னுடைய வடிவமாகக் கொண்டிருப்பவர், விநாயகப்பெருமான். அவரே பிரணவப் பொருளாகவும் விளங்குகிறார்.

விநாயகர் என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். எளியவர்களும், எளிய முறையில் வழிபடும் தெய்வமாக பிள்ளையார் பார்க்கப்படுகிறார். அவரை மஞ்சளிலும் செய்து வழிபடலாம். களிமண்ணிலும் செய்து வைத்து வணங்கலாம். சாணம் பிடித்து வைத்தால் அதிலும் பிள்ளையார் எழுந்தருள்வார். விநாயகரை வழிபட எந்த விதிமுறைகளும், சாஸ்திரங்களும் முக்கியமல்ல. நமக்கு தெரிந்த வகையில் அவரை நாம் வழிபாடு செய்யலாம்.

சதுர்த்தி என்பது ஒரு திதி. விநாயகரை வழிபட இந்தத் திதி உகந்தது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள், சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இது விநாயகர் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்து, வீட்டு வாசலில் மாவிலை தோரணங்களை கட்ட வேண்டும். வீட்டின் வாசலின் இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டினவைக்கலாம்.

பூஜை அறையைக் கழுவி, மெழுகி, கோலம்போட்டு, அதன் மையப் பகுதியில் ஒரு பலகை வைத்து அதன் மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும். அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு ‘ஓம்’என்று எழுதி களிமண் பிள்ளையாரை வைக்க வேண்டும். அதற்கு அருகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம் போன்ற நைவேத்தியங்களை படைத்து, விநாயகர் அகவல், கணபதி சகஸ்ரநாமம் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

Next Story