வாமன அவதாரத்தில் விநாயகரின் பங்கு


வாமன அவதாரத்தில் விநாயகரின் பங்கு
x
தினத்தந்தி 7 Sep 2021 11:34 PM GMT (Updated: 7 Sep 2021 11:34 PM GMT)

மத்சாசுரன் மற்றும் தம்பாசுரன் என்ற இரண்டு அரக்கர்களை, வதம் செய்யாமல் அவர்களின் மனதை விநாயகப்பெருமான் மாற்றியதாக விநாயகப் புராணம் சொல்கிறது. மேலும் அவர்கள் இருவரையும் நற்காரியங்கள் செய்யும்படி செய்தார்.

தேவர்களும் அசுரர்களும் காசியப மகரிஷியின் பிள்ளைகள். அதிதியின் பிள்ளைகள் தேவர்கள். திதியின் பிள்ளைகள் அசுரர்கள். அதிதி மற்றும் திதி இருவரும் சகோதரிகள். சொர்க்க லோகம் தேவர்களுக்கும், பாதாளலோகம் அசுரர்களுக்கும் தரப்பட்டது. அசுரர்களுக்கு அதில் திருப்தி இல்லை. தேவர்கள் தங்களது ஒழுக்கத்தாலும் கடின உழைப்பினாலும் சொர்க்க லோகத்தை வளம் பெறச் செய்தனர். அசுரர்கள் தாமச குணம் கொண்டவர்கள். எனவே கடின உழைப்பு அவர்களிடம் கிடையாது. எனவே சொர்க்க லோகத்தை தேவர்களிடம் இருந்து பறித்து தாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினர். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் மகாவிஷ்ணுவால் தோல்வி அடைந்தது. யாராக இருந்தாலும் கடின உழைப்பாலேயே அவரவர் பூமியை வளமாக்க பாடுபடவேண்டும். அதுவே தர்மம் என்பதால், விஷ்ணு தேவர்களின் பக்கம் இருந்தார்.

ஒரு சமயம் மகாபலி அசுரர்களுக்குத் தலைவரானார். அவர் விஷ்ணுவின் பரமபக்தர். மிகவும் நல்லொழுக்கம் கொண்டவர். ஆனால் அசுரர். அவர் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் ‘எப்படி சொர்க்க லோகத்தை கைப்பற்றுவது’ என ஆலோசனை கேட்டார். நல்லொழுக்கம் நிறைந்திருந்தாலும் அசுரர் குணமான தாமச குணம் நீங்காது. எனவே அவர் மனத்திலும் தேவலோகத்தை கைப்பற்றும் எண்ணம் இருந்தது.

சுக்ராச்சாரியாரின் அறிவுரைப்படி, மகாபலி சக்கரவர்த்தி நூறு அஸ்வமேத யாகம் நடத்தத் தொடங்கினார். முதல் யாகம் முடிந்ததுமே இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. மகாபலி நூறு யாகங்களையும் முடித்து விட்டால், இந்திரப் பதவிக்கு தகுதிப்பெற்றுவிடுவார் என்பதாலேயே இந்திரனுக்கு பயம் உண்டானது. உடனடியாக விஷ்ணுவைப் போய் சந்தித்தான்.

இந்திரனுக்கு உதவி செய்வதற்காகவே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார். விஷ்ணுவுக்கு ‘பக்தவத்சலன்’ என்ற பெயர் உண்டு. இதற்கு ‘பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்’ என்று பொருள்.இந்திரனுக்கு உதவி செய்கிறார் என்றால், மகாபலியும் விஷ்ணுவின் பக்தன்தானே. அவருக்கும் மகாவிஷ்ணு உதவி செய்யத்தானே வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்புதான்.மகாபலி, தான் விஷ்ணு பக்தன் என்ற உத்வேகத்தில் விநாயகரை வணங்காமல், தன்னுடைய யாகத்தை தொடங்கிவிட்டார். இதனாலேயே மகாபலியின் விதி மாறியது.காசியபர்- அதிதி தம்பதிக்கு மகனாக அவதரித்த விஷ்ணு, வாமனர் என்ற திருநாமம் கொண்டார். அதற்கான வழியை தந்தை காசியபரிடம் கேட்டார்.

காசியபரோ, “விநாயகரை வழிபாடு செய்” என்று கூறி, கணபதியின் ஷடாக்‌ட்சர மந்திரத்தை உபதேசித்தார். அதன்படி வாமனரும் அந்த மந்திரத்தை உச்சரித்து, விநாயகரை வழிபட்டார்.அவர் முன்பாக தோன்றிய விநாயகர், “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, “நான், மகாபலியை நரகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று சொன்னார்.உடனே விநாயகர், “உனக்கு என்னுடைய உதவி எப்போது தேவையோ, அப்போது என்னை நினை” என்று கூறி மறைந்துவிட்டார்.பின்னர் வாமனர், மகாபலியின் யாக கூடத்திற்கு வந்துசேர்ந்தார். அப்போது அவர் விநாயகரை நினைத்தார். அந்த வேளையில், மத்சாசுரன், தம்பாசுரன் இருவரும் மகா பலியின் மனதிற்குள் நுழைந்துவிட்டனர். இதனால் மகாபலியின் மனம் ஆணவத்தால் நிறைந்துபோனது. அவன் தேவர்களை வெல்ல வேண்டும் என்ற மனநிலையிலேயே யாகத்தை செய்தான்.

வாமனர், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். அவரும் சம்மதித்தார். திடீரென்று தன்னுடைய உருவத்தை பெரிதாக்கிய வாமனர், ஒரு அடியால் வானத்தையும், மற்றொரு அடியால் பூமியையும் அளந்து முடித்து விட்டார். இப்போது மகாபலிக்கு மண்ணும் சொந்தமில்லை. விண்ணுலகும் சொந்தமில்லை. மூன்றாவது அடிக்கு என்ன செய்து வந்து என்று யோசித்தார் மகாபலி.தன்னுடைய குரு சுக்ராச்சாரியாரை பார்த்தார். அவரோ, “நீ விநாயகரை வணங்காமல் யாகத்தை தொடங்கிவிட்டாய். இப்போது விநாயகரை நினை. அவர் வழிகாட்டுவார்” என்றார்.அதன்படியே விநாயகரை நினைத்தார், மகாபலி. விநாயகரோ மகாபலியிடம், “மூன்றாவது அடிக்கு உன் உடலையே கொடுப்பதாகச் சொல்” என்றார். அதன்படியே தலைவணங்கி வாமனரை வணங்கி நின்றார், மகாபலி.
உடனே அவரது தலையில் காலை வைத்து அழுத்தி, அவரது பாதாள உலகத்திற்கே தள்ளினார். தற்போது நடைபெறும் மன்வந்திரம் முடிந்ததும், மகாபலிக்கு இந்திரப் பதவி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன.

அந்த வகையில் வாமன அவதாரத்தில் விநாயகரின் பங்கு முக்கியமானது.


Next Story