குழந்தையை உயிர்ப்பித்த ராகவேந்திரர்


குழந்தையை உயிர்ப்பித்த ராகவேந்திரர்
x
தினத்தந்தி 21 Sep 2021 12:43 PM GMT (Updated: 21 Sep 2021 12:43 PM GMT)

ராகவேந்திர சவாமிகள், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஆவார். இவர் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்ற பக்த பிரகலாதரின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. இவர் தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவர் நடத்திய ஒரு அற்புதத்தைப் பற்றியே இங்கே பார்க்க இருக்கிறோம்.

ராகவேந்திரர் ஒவ்வொரு ஊராகக் சென்று, அங்கு மக்களிடத்தில் வைணவ நெறியைப் பற்றி எடுத்துரைத்து வந்தார். ஒரு முறை ஒரு ஊரில் தங்கியிருந்தார். அந்த ஊரில் உள்ள கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக, ஒரு அண்டா நிரம்ப, பழச்சாறு செய்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது கிராம தலைவரின் வீட்டில் இருந்த சிறிய குழந்தை, அங்கே விளையாடிக்கொண்டிருந்தது. அது பழச்சாறு இருந்த அண்டாவைப் பார்த்து வாய் பிளந்தபடி அதன் அருகேச் சென்றது. பெரிய அளவில் இருந்த அண்டாவினுள் எட்டிப்பார்த்த அந்தக் குழந்தை, தடுமாறி அண்டாவுக்குள் விழுந்து விட்டது. அருகில் யாரும் இல்லாத காரணத்தால், குழந்தை பழச்சாறுக்குள் மூழ்கிப்போனது. அனைவரும் ராகவேந்திரருடன் சேர்ந்து மூலவராமருக்குரிய பூஜையில் தங்கள் விழிகளை அகற்றாமல் ஈடுபட்டிருந்தனர்.

அதனால் சமயலறையில் நடந்த அந்த விபரீதத்தை யாரும் அறியவில்லை. குழந்தை அண்டாவுக்குள் மூழ்கிய அதே நேரம், ராகவேந்திரர் பூஜைக்காக வைத்திருந்த கமண்டலத்தில் ஒரு வண்டு விழுந்துவிட்டது. பூஜைக்கு வேறு தீர்த்தம் கேட்டுப் பெற்ற ராகவேந்திரர், உள்ளே நடந்ததை அறிந்து கொண்டார். பூஜை முடிந்ததும், பிரசாதங்கள் வழங்கும் நேரம் வந்தது. உடனே ராகவேந்திரர், கிராம தலைவரை அழைத்து, “உங்கள் குழந்தையை அழைத்துவாருங்கள்” என்றார்.அப்போதுதான் கிராம தலைவரும், அவரது மனைவியும் பிள்ளையைத் தேடினர். குழந்தையை, ராகவேந்திரர் காலில் விழுந்து வணங்க வைக்க வேண்டும் என்ற ஆவலில் அவர்கள் இருவரும் நாலாபுறமும் குழந்தையைத் தேடினர். முடிவில் சமையலறையில் பழச்சாறு வைக்கப்பட்டிருந்த அண்டாவுக்குள் குழந்தை விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்து அவர்கள் துவண்டு போனார்கள். குழந்தை இறந்த விஷயம் அறிந்தால், வீட்டிற்கு வந்தவர்கள் அபசகுனமாக கருதுவார்கள். மேலும் அனைவரும் பட்டினியாக செல்லும் நிலை ஏற்பட்டுவிடுமே என்று கணவனும், மனைவியும் வருந்தினர்.

எனவே குழந்தை இறந்ததை அவர்கள் மறைக்க முயற்சித்தனர். ஆனால் ராகவேந்திரர், விடாப்பிடியாக குழந்தையை அழைத்து வந்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி, கிராம தலைவர் நடந்த விவரத்தை ராகவேந்திரரிடம் கூறினார். அதோடு குழந்தையைக் கொண்டு வந்து அவரது பாதத்தில் சமர்ப்பித்து கதறி அழுதார். ராகவேந்திரர் தனது கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து குழந்தையின் மீது தெளித்தார். பின் கண் மூடிப் பிரார்த்தித்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறந்து போன அந்தக் குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டது. நின்றுபோன இதயம் மீண்டும் துடித்தது. குழந்தை பழைய படியே துள்ளி எழுந்து அங்கும் இங்கும் ஓடி விளையாடத் தொடங்கியது. கூடியிருந்தவர்கள் அனைவரும் பரவசம் அடைந்தனர்.

கிராமத் தலைவரும், அவரது மனைவியும், பூஜைக்காக வந்திருந்த மக்கள் அனைவரும் ராகவேந்திரரின் சக்தியைக் கண்டு மெய்யுருகி நின்றனர்.


Next Story