திருச்செந்தூர் தீர்த்தங்கள்


திருச்செந்தூர் தீர்த்தங்கள்
x
தினத்தந்தி 30 Sep 2021 3:41 PM GMT (Updated: 30 Sep 2021 3:41 PM GMT)

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் இரண்டாவது திருத்தலமாக திகழ்வது, திருச்செந்தூர். இங்கு ஆலயத்தின் முன்பாக இருக்கும் கடலும், முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் நாழிக்கிணறு தீர்த்தமும் முக்கியமான தீர்த்தங்களாக இருக்கின்றன.

இவை தவிர திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.

முகாரம்ப தீர்த்தம்:- இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், கந்தக் கடவுளின் கருணையைப் பெறுவர்.

தெய்வானை தீர்த்தம்:- உணவு, உடை, இருப்பிடம், செல்வ வளம் பெருக நினைப்பவர்கள், இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

வள்ளி தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடினால், பிரணவ வடிவமாய் பிரகாசிக்கும் முருகனின் திருவடியை தியானிக்கும் ஞானம் வந்து சேரும்.

லட்சுமி தீர்த்தம்:- நிதிகளை தன்னுடன் வைத் திருக்கும் குபேரனால் அடையமுடியாத செல்வங் களைக்கூட, இந்த தீர்த்தத்தில் நீராடினால் பெறலாம்.

சித்தர் தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு தடையாக இருக்கும் உலக மாயைகளை அகற்றி, முக்தியை வழங்கும்.

அஷ்டதிக்கு பாலகர் தீர்த்தம்:- கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களின் நீராடு வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடையலாம்.

காயத்ரி தீர்த்தம்:- 100 யாகங்களை செய்தவர்கள் அடைகின்ற பலனைப் பெற்றுத் தரும்.

சாவித்ரி தீர்த்தம்:- பிரம்மன் உள்ளிட்ட தேவர் களால் காண்பதற்கு அரிய பராசக்தியின் திருவடிகளை பூஜித்த பலன் கிடைக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்:- வேதங்களையும், ஆகமங் களையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்த ஞானத்தை வழங்கும்.

ஐராவத தீர்த்தம்:- சந்திர பதாகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்து சேரும்.

வயிரவ தீர்த்தம்:- பாவங்களைப் போக்கும் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

துர்க்கை தீர்த்தம்:- சகல துன்பங்களும் நீங்கி நன்மை பெருகும்.

ஞான தீர்த்தம்:- இறைவனை நினைத்து வழி படுபவர்களுக்கும், அவனை நினைப்பவர்களுக்கும் நன்மையை வழங்கும்.

சத்திய தீர்த்தம்:- களவு, மது, குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றில் இருந்து விடுவித்து, நல்வழியில் நிற்க உதவி புரியும்.

தரும தீர்த்தம்:- தேவாமிர்தம் என்னும் தேவதீர்த்தத்தை அடைவீர்கள்.

முனிவர் தீர்த்தம்:- வாழ்வில் சுபீட்சத்தை வழங்கும் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.

தேவர் தீர்த்தம்:- ஆறு விதமான தீய குணங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம்:- சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்களையும் அளிக்க வல்லது.

கந்தபுஷ்கரணி தீர்த்தம்:- சிவபெருமானின் திருவடியைக் கண்ட பலன் கிடைக்கும்.

கங்கா தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழியை ஏற்படுத்தும்.

சேது தீர்த்தம்:- சகல பாதகத்தில் இருந்தும் விலக்கி, நன்மையை வழங்கும்.

கந்தமாதன தீர்த்தம்:- பாவங்களைப் போக்கி பரிசுத்தமான வாழ்வைத் தரும்.

மாதுரு தீர்த்தம்:- அன்னையின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

Next Story