ஆனந்த வாழ்வருளும் ஐப்பசி நீராடல்
மயிலாடுதுறை மயூரநாதா் திருக்கோவில் முன்பு உள்ள, காவிரி தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது சிறப்புக்குரியது. ஐப்பசி மாதத்தில் இந்த நதியில், அனைத்து புண்ணிய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த மாதத்தில் இங்கு நீராடுவதை `துலா ஸ்நானம்' என்கிறார்கள்.
கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடு பவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். அதற்காகவே அனைத்துப் புண்ணிய நதிகளும், காவிரியில் வந்து உறைகின்றன.
ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே, ‘துலா ஸ்நானம்’ வழிபாடாகும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் காவிரியில் நீராடுவதாக ‘துலாக் காவிரி புராணம்’ கூறுகிறது. முடவன் முழுக்கு எனப்படும் கார்த்திகை மாத முதல் தேதியில், மயூர நாதர் ஆலயத்தில் இருந்து அம்மையப்பனும் அலங்கார ரதத்தில் துலாக்கட்டத்தில் எழுந்தருள்வார். அப்போது காவிரியில் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி நடைபெறும். அந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதனால் நம்முடைய தலைமுறை பாவங்களும், கர்ம வினைகளும், வம்ச சாபம், பெண் சாபம் யாவும் அகலும் என்கிறார்கள்.
புண்ணிய நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப் படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும், ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை உடனாய மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். அதோடு இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி உடனாய சக்தி புரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தால் சிறப்பான பலனைப் பெறலாம்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக் கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால் ‘மயிலாடுதுறை’ என்ற பெயர் உண்டானது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்-பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூரத் தாண்டவ திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.
கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்து வேறுபாடு நீங்கி தம்பதியரிடையே ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இத்தல அம்மனின் திருநாமம் ‘அபயாம்பிகை’ என்பதாகும்.
அமைவிடம்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
Related Tags :
Next Story