தியாகத்தின் சிறப்பே தீபாவளி


தியாகத்தின் சிறப்பே தீபாவளி
x
தினத்தந்தி 3 Nov 2021 2:13 AM GMT (Updated: 3 Nov 2021 2:13 AM GMT)

தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதே, ‘தீபாவளி.’ மனதில் இருக்கும் தீய எண்ணங்களான இருளை நீக்கும் விதமாகவும், மனதில் தூய்மை என்னும் வெளிச்சம் பரவும் விதமாகவும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

ராமாயண இதிகாசத்தின்படி, ராவணன் வதம் செய்யப்பட்ட நாளை ‘விஜய தசமி’யாக கொண்டாடுகிறோம். ராவண வதம் முடிந்ததும் ராமர் தன்னுடைய மனைவி சீதா, சகோதரன் லட்சுணன் மற்றும் தன் ஆதரவாளர்களோடு, அயோத்தி புறப்பட்டார். அவர் கால்நடையாகவே இலங்கையில் இருந்து அயோத்தி வந்தடைந்தார். இலங்கையில் இருந்து அயோத்திக்கு வர 21 நாட்கள் ஆனது. அப்படி ராமபிரான் அயோத்திற்கு வந்த 21-வது நாளில் அங்குள்ள மக்கள், வீடு, தெரு, நகரம் முழுவதும் வரிசையாக தீபங்களை ஏற்றி ஒளி வீசச்செய்தனர். அதோடு பட்டாசுகளை வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அந்த நாளே ‘தீபாவளி’ என்கிறார்கள்.

அதேநேரம் துவாபர யுகத்தில் கிருஷ்ணராக திருமால் அவதரித்தபோது நிகழ்ந்த நரகாசுரனின் வதம்தான், தீபாவளியாக கொண்டாடப்படுவதாக மற்றொரு கதையும் உள்ளது. திருமால், வராக அவதாரம் எடுத்திருந்தபோது, கடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியை, மீட்டு வந்தார். அப்போது பூமாதேவிக்கும், வராகப் பெருமானுக்கும் மகனாகப் பிறந்தவன்தான், நரகாசுரன். அவன் மனினதாக இருந்தாலும், அசுர குணத்தோடு இருந்ததால் நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.

நரகாசுரன் கடுமையான தவம் இருந்து பிரம்மனிடம் இருந்து ஒரு வரத்தைப் பெற்றான். ‘தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் நிகழக்கூடாது’ என்பதே அவன் பெற்றிருந்த வரம். அந்த வரத்தின் பலத்தால், தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் கிருஷ்ண அவதாரத்தின்போது, பூமாதேவியை சத்யபாமாவாக அவதரிக்கச் செய்தார், கிருஷ்ணன்.

பின்னர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவன் ‘பிரக்ஜோதிஷபுரம்’ என்ற நகரை நிர்மாணித்து அரசாட்சி செய்து வந்தான். அந்த நகருக்குள் நுழைய வேண்டுமானால், கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய கோட்டைகளை தாண்ட வேண்டும். அந்தக் கோட்டைகளை கிருஷ்ணர் அழித்துவிட்டு, போரை தொடங்கும் அறிகுறியாக சங்கை முழங்கினார்.

சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்து வெளியே வந்த நரகாசுரன், கோட்டைகள் உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்தான். கடும் சீற்றத்தோடு கிருஷ்ணனுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான். நரகாசுரனின் தாயால்தான் அவனை அழிக்க முடியும் என்பதால், கிருஷ்ணன் எவ்வளவு போரிட்டாலும் அது வீணே. ஆகையால் கிருஷ்ணர் தனக்கு காயம் பட்டதுபோல் நடித்தார். இதனைக் கண்டு கோபம் கொண்ட சத்யபாமா, கணவனைக் காயப்படுத்திய நரகாசுரனை அம்பெய்து வீழ்த்தினாள்.

நரகாசுரன் இறக்கும் தருவாயில்தான் அவனுக்கு சத்யபாமா தன்னுடைய தாய் என்பது தெரியவந்தது. விஷயம் தெரிந்து சத்யபாமாவும் துடித்துப் போனாள். இருப்பினும் உலக நன்மைக்காக அவனது அழிவை கனத்த இதயத்தோடு ஏற்றுக்கொண்டாள். அந்த தியாகம்தான் தீபாவளி பண்டிகையின் அடிநாதம். மாறாக நரகாசுரனை அழித்ததற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை. ஒரு அசுரனை அழித்ததற்காக பண்டிகை என்றால், தினமும் எத்தனையோ பண்டிகை கொண்டாட வேண்டியதிருக்கும். ஆனால் இது தியாகத் தின் பலனாக கொண்டாடப்படுவதால்தான், தீபாவளி சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

Next Story