தேடி வந்து சுகமளிப்பவர்


தேடி வந்து சுகமளிப்பவர்
x
தினத்தந்தி 3 Nov 2021 2:15 AM GMT (Updated: 3 Nov 2021 2:15 AM GMT)

ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர். அவர் நோயிலும், தனிமையிலும் தவிப்போருக்கு, ஆறுதலையும் தேறுதலையும் தருகிறவர். ‘அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்’ என்ற வாக்கை, எசாயா 65-ல் 24-ம் வசனத்தில் தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நம்முடைய தேவைகளையோ அல்லது பாரங்களையோ, அவரிடம் நாம் கூற வேண்டும் என்று கூட அவர் எதிர்பார்ப்பதில்லை. நாம் கலங்கி இருக்கும்போது நம்முடைய மனநிலையை அறிந்து செயல்படுபவராய் தேவன் இருக்கிறார். அப்படி தனிமையில் விடப்பட்டு கலங்கி போய் இருந்த ஒரு மனிதரை, இயேசு தேடிச் சென்று குணமாக்கியதை குறித்து இங்கே பார்ப்போம்.

எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அதற்கு எபிரேய மொழியில் ‘பெத்சதா’ என்று பெயர். அக்குளத்தைச் சுற்றி அமைந்திருந்த ஐந்து மண்டபங்களிலும் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் என பலர் படுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் அந்த குளத்து நீர் எப்போதும் கலங்கும் என்று காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார் என்பதும், தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார் என்பதும் அவர்கள் நம்பிக்கை.

அந்த மண்டபத்தில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் இருந்தார். யூதர்களின் திருவிழாவிற்காக எருசலேமுக்கு வந்த இயேசு, பெத்சதா குளத்தின் அருகே சென்றார். அப்போது முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த அந்த நபரைக் கண்டார். அவர் பல வருடங்களாக நோயினால் அவதிப்பட்டவராய் இருப்பதை அறிந்த இயேசு, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்.

ஆனால் அவரே “ஐயா, தண்ணீர் கலங்கும் போது, என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று அவர் இயேசுவிடம் கூறினார்.

உடனே இயேசு அவரிடம் “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

இயேசு பெத்சதா குளத்தின் அருகே இருந்த அந்த மனிதரிடம் “நலம் பெற விரும்புகிறீரா?” என்று கேட்டபோதும், அந்த மனிதர் ‘ஆம் நான் நலம் பெற வேண்டும்’ என்று கூறவில்லை. மாறாக தன்னுடைய இயலாமையை அவர் இயேசுவிடம் கூறுகிறார். தனக்கு யாரும் உதவி செய்ய முன்வருவதில்லை என்பதையும், ஆதரவற்ற நிலையில் தனிமையில் விடப்பட்டுள்ளதையும் அவர் வெளிப்படுத்தினார். ஏனெனில் தன்னிடம் கேள்வி கேட்கும் இயேசுவால் தனக்கு சுகத்தை அளிக்க முடியும் என்பதை அந்த மனிதர் அறிந்திருக்கவில்லை.

ஆயினும் இயேசு ‘எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்’ என்று கூறியவுடன் சிறிதும் தயக்கமின்றி அவர் எழுந்து நடந்தார்.

குணமடைந்த அந்த மனிதர் இயேசுவை பற்றி அறியாத ஒருவராக இருந்தார். அவர் குணமடைந்ததை பற்றி யூதர்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர்களிடம் ‘தன்னை குணப்படுத்தியவர் யார் என்று தெரியாது’ என கூறுகிறார். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பே தனது குடும்பத்தாராலும், உற்றார் உறவினராலும் ஒதுக்கப்பட்டு இந்த குளத்தின் கரைக்கு கொண்டு வரப்பட்டு தனிமையில் விடப்பட்டவர் அந்த மனிதர். பல வருடங்களாக, குளம் கலங்கினாலும் குணம்பெற முடியவில்லையே என்று வேதனை பட்டுக் கொண்டிருந்த அவரைப் பார்த்து, இயேசு மனம் கலங்கினார். அவரது இயலாமையையும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையையும் உணர்ந்த இயேசு, தன்னைப் பற்றி அந்த மனிதர் அறிந்திராத போதும், அவரை நாடிச் சென்று சுகத்தைக் கொடுத்தார்.

இன்றும் நம்மில் பலர், தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, ‘எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே’ என்று மனம் கலங்கி போய் இருக்கலாம். ஆனாலும் நம் மீது இரக்கம் காட்ட இயேசு நம்மோடு இருக்கிறார். அவர் என்றும் நம்மை தனிமையில் தவிக்க விடுவதில்லை என்பதை உணர்ந்தவர்களாய், அவரிடம் நாம் அடைக்கலம் புகுவோம். ஏனெனில் அவர் நம்முடைய புலம்பலையும், களிநடனமாக மாற்றி மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவராக இருக்கிறார்.

Next Story