திருப்பம் தரும் திருவலிதாயம்


திருப்பம் தரும் திருவலிதாயம்
x
தினத்தந்தி 9 Nov 2021 12:13 PM GMT (Updated: 9 Nov 2021 1:21 PM GMT)

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த இந்த அற்புதமான ஆலயத்தில் வலிதாயநாதர், வல்லீஸ்வரர் என்ற பெயர்களில் இறைவனும், தாயம்மை என்ற பெயரில் இறைவியும் அருள்பாலிக்கிறார்கள். இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்த வர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார்.

இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார்.

அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

குருவைத் தவிர, மகாவிஷ்ணு, இந்திரன், பிரம்மன், சூரியன் மற்றும் சந்திரன், அனுமன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் உள்ளிட்ட பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள். இருப்பினும் இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு மட்டும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது.

இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம்.


Next Story