கண்நோய் தீர்க்கும் கண்ணாத்தாள்


கண்நோய் தீர்க்கும் கண்ணாத்தாள்
x
தினத்தந்தி 23 Nov 2021 4:28 PM GMT (Updated: 23 Nov 2021 4:28 PM GMT)

நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை.

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.

பிரமோற்சவம், கொடியேற்றம் உள்ளிட்ட காப்பு கட்டும் நிகழ்வுகள், சிவாச்சாரியார்கள், வைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.

பாரசைவர்களாகிய உவச்சர் குலத்தினரால், இந்த ஆலயத்தில் பூஜை செய்யப்படுகிறது.

பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ‘களியாட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. இது கும்பகோணம் மகாமக திருவிழா போன்று நடத்தப்படும்.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தல வரலாறு

வனமாக இருந்த இடத்தில் கண்ணுடைய நாயகி அம்மன், ஒரு மரத்தின் அடியில் சுயம்புவாக புதையுண்டு இருந்தார். பால் வியாபாரிகள், இந்தப் பகுதியில் வரும்போது, பால் குடம் கவிழ்ந்துபோவது வாடிக்கையாகிப்போனதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.

இப்பகுதியை ஆண்ட மன்னனின் கனவில், தான் இருப்பதை அம்மன் உணர்த்தியதை அடுத்து, அந்த பகுதியை தோண்டி, அம்மனை வெளிக்கொண்டு வந்தனர்.

புதையுண்ட அம்மன் சிலையை மீட்கும் பணியின்போது, ஒருவரது கண்ணில் கடப்பாரை நுனி பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் அவர் அம்மனை வெளிக்கொண்டு வரும் பணியை தொடர்ந்தார். முழுமையாக அம்மன் சிலை வெளிவந்ததும், அவரது கண்ணில் பட்ட காயமும் முழுமையாக நீங்கியது. இதனாலேயே ‘கண்ணத்தாள்’ என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.

திருவிழாக்கள்

* சித்திரை மாத முதல் செவ்வாய் அன்று அம்மனுக்கு கண் திறப்பு விழா நடைபெறும். 22 நாட்கள் திருவிழா இது.

* வைகாசி பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.

* ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா, 10 நாட்கள் நடத்தப்படும்.

* புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.

* ஐப்பசியில் 10 நாட்கள் நடைபெறும் கோலாட்ட திருவிழாவும் விசேஷமானது.

* தை மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் தைலக்காப்பு உற்சவமும் பிரசித்திப்பெற்றது.


Next Story