காவிரியால் நீராட்டப்படும் பெருமாள்


காவிரியால் நீராட்டப்படும் பெருமாள்
x
தினத்தந்தி 7 Dec 2021 5:42 AM GMT (Updated: 7 Dec 2021 5:42 AM GMT)

பெருமாளுக்குரிய 108 திவ்ய தேசங்களில் முதல் தலமாக விளங்குவது, திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், 21 கோபுரங்கள், 7 பிரகார சுற்றுகள், மிக அழகிய மண்டபங்கள், திருக்குளங்கள் என பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது. இந்த ஆலயத்தில் இருக்கும் சில அதிசயிக்கத்தக்க விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..

மோட்ச ராமானுஜர்

திருவரங்கம் திருத்தலத்தில் தங்கி, பல காலம் அரங்கநாதருக்கு சேவை செய்து வந்தவர், ராமானுஜர். இவர் முக்தி அடைந்த தலமும் இதுதான். அவரது உடலை, பத்மாசனத்தில் அமர வைத்தபடி இங்கே ஜீவசமாதியில் வைத்துள்ளனர். சிலகாலம் கழித்து ராமானுஜர், அந்த கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை மாதத்தில் வரும் திருவாதிரை தினத்தன்று, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

பெருமாளுக்கு 365 போர்வை

கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியை ‘கைசிக ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள். அன்றைய தினம் இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், இப்படி போர்வை அணிவிக்கப்படுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

விளக்கெண்ணெய் தீபம்:

மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னிதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

தானியலட்சுமி

அன்னப்பெருமாள் அருளும் இரண்டாம் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கும் தனிச் சன்னிதி உள்ளது. இந்த தாயாருக்கு வலதுபுறம் கிருஷ்ணரும், இடதுபுறம் நரசிம்மரும் காட்சிதருகின்றனர். சுக்ர கிரகத்தால் பாதிக்கப் படுபவர்கள், இந்த தானியலட்சுமிக்கு வெண் பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண் மொச்சை தானியத்தை நைவேத்தியமாக படைத்து வழி படுவார்கள். இதனால் சுக்ர தோஷம் நீங்குமாம். பிரமோற்சவத்தின் போது, அரங்கநாத பெருமாள், இந்த தானியலட்சுமியின் சன்னிதி அருகில் எழுந்தருளி, நெல் அளக்கும் வைபவம் காண்கிறார்.

காவிரி நீர் அபிஷேகம்

ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரம் அன்று, அரங்கநாதருக்கு அகில் மற்றும் சந்தனத்தின் கலவையை சாத்தி ‘தைலாபிஷேகம்’ செய்வார்கள். அன்றைய தினம் உற்சவரான நம்பெருமாளுக்கு, 22 குடங்களில் காவிரி நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். அனைத்து நாட்களிலும் தங்கக் கவசம் அணியப்பட்ட நிலையிலேயே அபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளும், இந்த நம்பெருமாள் இந்த ஒரு நாள் மட்டும் தங்கக் கவசத்தை களைந்து விட்டு அபிஷேகத்தை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் இந்த தீர்த்த அபிஷேகத்தை காவிரி நதி தாயே செய்வதாக ஐதீகம்.

சன்னிதி ஒன்று.. தாயார் மூன்று..

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னிதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம்.

Next Story