கருடன் கூறிய மூவகை மனிதர்கள்


கருடன் கூறிய மூவகை மனிதர்கள்
x

ஒரு முறை மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமான கருடனின் மீது அமர்ந்து, இந்த பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வந்தார். பூமியின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கருடா.. இந்த உலகத்தில் எத்தனை வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?”

எல்லாம் அறிந்த இறைவன் ஏதோ ஒரு விளையாட்டை உண்டாக்கும் நோக்கில், தன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பதாக புரிந்துகொண்ட கருடன், “இந்த உலகத்தில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், இறைவா” என்று பதிலளித்தார்.

ஆச்சரியம் அடைவதுபோல் புருவத்தை உயர்த்திய மகாவிஷ்ணு, “என்ன சொல்கிறாய் கருடா?. இத்தனை கோடி மனிதர்கள் வாழும் பூமியில், மூன்று வகையான மனிதர்கள் தான் இருக்கிறார்களா?” என்றார்.

“இறைவா.. எல்லாம் அறிந்த நீங்கள்.. என் மூலம் இந்த உலகுக்கு எதையோ சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதற்கு என்னால் பதில் கூறாமல் இருக்க முடியாது.. அதனால் சொல்கிறேன்.. இந்த உலகில் பறவையும் அதன் குஞ்சுகளும் போல் வாழும் மனிதர்கள் ஒரு வகை. பசுவும் அதன் கன்றும் போல் வாழும் மனிதர்கள் மற்றொரு வகை. கணவன்- மனைவி போல் வாழும் மனிதர்கள் இன்னொரு வகை. இப்படி மூன்று வித மனிதர்கள்தான் இருக்கிறார்கள்” என்றார், கருடன்.

“இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி.. விரிவான விளக்கம் வேண்டும் கருடா..” என்றார் மகாவிஷ்ணு..

கருடனும் சொல்லத் தொடங்கினார். “இறைவா.. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையானது, தன் குஞ்சுகளுக்காக பகலில் இரை தேடிச்செல்லும். அந்த தாய் பறவை வருவதற்குள், சில குஞ்சுகள் பாம்புக்கு இரையாகிவிடும். இரவு கூடு திரும்பும் தாய் பறவை, தான் இழந்து விட்ட குஞ்சுகளுக்காக வருதப்படாது. மாறாக, கூட்டில் இருக்கும் மற்ற குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும். அந்த குஞ்சுகளுக்கும் கூட, தன் பசிதான் தெரியுமே தவிர, தாயின் வேதனை புரியாது. அதைப் பற்றிய சிந்தனை அவற்றிக்கு வராது. வளர்ந்ததும் குஞ்சுகள் பறக்க முயற்சிக்கும். அவற்றில் மரத்தில் இருந்து கீழே விழும் சில மடிந்து போகும். மற்றவை உயிர்வாழும்.

இந்த வகை மனிதர்கள், வறுமையுடன் போரிடுவார்கள். கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்த போராடுவார்கள். எனவே இவர்களுக்கு இறைவனைப் பற்றிய சிந்தனை இருப்பதில்லை. இரை தேடும் பறவையைப் போல எந்திரமயமான வாழ்க்கை இருக்கும்.

மாட்டு தொழுவத்தில் பசுவும், கன்றும் வேறுவேறு இடத்தில் கட்டப்பட்டிருக்கும். பசுவைப் பார்த்து கன்றும், கன்றைப் பார்த்து பசுவும் சத்தம் போடும். தாயிடம் பால் குடித்தால் தன்னுடைய பசி அடங்கிவிடும் என்பது கன்றிற்கு தெரியும். ஆனால் அதை, அதன் கழுத்தின் கட்டியிருக்கும் கயிறு அங்கிருந்து நகர விடாமல் தடுக்கும்.

இரண்டாம் வகை மனிதர்கள், இந்த பசு, கன்றைப் போன்றவர்கள். அவர்களுக்கு கடவுள் சிந்தனை இருக்கும். அவரை அடைந்தால், நம்முடைய வாழ்வு சுகமாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் குடும்பம், பாசம், பந்தம், ஆசை போன்ற கயிற்றில் சிக்கிக்கொண்டு, இறைவனை அடைய முடியாமல் தவிப்பார்கள்.

இதற்கு முன்பு யார் என்றே தெரிந்திராத ஒரு பெண்ணை, திருமணம் செய்து கொண்ட கணவன், ஒரு வித கூச்சத்தால் அவளுடைய முகம் பார்த்து பேசாமல் ஒதுங்கிச் செல்வான். புதியதாக வந்த மனைவியும் அப்படித்தான். ஆனால் மனைவி தன்னுடைய கணவரை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரிப்பாள். பிடித்ததை சமைப்பாள். அவனுக்காகவே பிறந்தவள் நான் என்பதை, கணவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். நாளடைவில் மனைவியின் அன்பில் கணவன் கரைவான். அவளைவிட்டு பிரிய அவனுக்கு மனம் இருக்காது.

மூன்றாம் வகை மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். அவர்கள் கடவுள் சிந்தனனயிலேயே காலத்தை கழிப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களை சோதித்த கடவுள், பின்னர் அவர்களை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வார். அதன்பின் அவர்களை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது” என்று கூறி முடித்தார் கருடன்.

அதைக் கேட்டு அகமகிழ்ந்த மகாவிஷ்ணு. கருடனின் மதிநுட்பத்தை எண்ணி மிகவும் பாராட்டினார்.

Next Story