பயம் விலக்கும் பைரவர்


பயம் விலக்கும் பைரவர்
x
தினத்தந்தி 9 Jan 2022 5:46 AM GMT (Updated: 9 Jan 2022 5:46 AM GMT)

தாருகாசுரன் என்ற அசுரன், ‘பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு நேரக்கூடாது’ என்று வரம் கேட்டான். அந்த வரத்தையே அவனுக்கு அருளினார், சிவபெருமான்.

பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு மரணம் நிகழ வாய்ப்பில்லை என்று கருதிய தாருகாசுரன், மூவுலகங்களையும் கைப்பற்றி, அங்கிருந்த தேவர்களையும் மகிரிஷிகளையும் துன்புறுத்தினான்.

அவனது துன்பத்தில் இருந்து தங்களை காத்தருளும்படி தேவர்கள் அனைவரும், சிவ- பார்வதியிடம் முறையிட்டனர். அப்போது பார்வதி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து ஒரு சுடரை உருவாக்கினாள். அந்த சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. அந்த பெண் தெய்வமே ‘காளி’ என்று பெயர் பெற்றாள். காளி கடும்கோபத்துடன், தாருகாசுரன் இருக்கும் திசை நோக்கி பார்த்தாள். அந்த பார்வையில் இருந்த கனல், அசுரனை சுட்டெரித்தது. பின் அந்தக் கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு திருவமுது கொடுத்தாள். சிவபெருமான், காளிளையும், அந்தக் குழந்தையையும் தன்னுடைய உடலுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார்.

அப்போது காளியால் உருவாக்கப்பட்ட எட்டுக் குழந்தைகள், சிவபெருமானின் உடலில் இருந்து வெளிப்பட்டன. அந்த எட்டுக் குழந்தைகளையும் ஒன்றாக்கிய சிவபெருமான், அந்தக் குழந்தைக்கு ‘பைரவர்’ என்று பெயரிட்டதாக ஒரு புராணக் கதை சொல்கிறது. அந்த பைரவரை தன்னுடைய காவல் தெய்வமாக சிவபெருமான் நியமித்தார். பைரவருக்கு, நாய் வாகனமாக இருக்கிறது. அர்ப்பணிப்பின் வடிவமாக நாய் உள்ளது. வாழ்க்கையில் இன்ப துன்பம் எதுவாக இருந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்று வேதம் சொல்லும் கூற்றின் வடிவமாக பைரவரின் இந்த நாய் வாகனம் திகழ்கிறது. நாய்க்கு ‘வேதஞாளி’ என்ற பெயர் உண்டு. பைரவரை அஷ்டமி திதிகளில், அதுவும் தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும், பைரவரை வணங்குவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நவக்கிரக பைரவர்

பைரவ பெருமான், ராகு-கேது என்ற பாம்பு கிரகங்களை பூணூலாக அணிந்திருக்கிறார். சந்திரனை தன்னுடைய தலையில் சூடியுள்ளார். சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கம். தலையில் மேஷம், வாய் பகுதியில் ரிஷபம், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித் தலங்களில் மீன ராசியும் உள்ளதாக ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்டமி செவ்வாய்

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி னால், கடன் தொல்லை தீரும். நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் பைரவரை மூலவராகக் கொண்ட கோவில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன்பாக யந்திரம் ஒன்று இருக்கிறது. இங்கு பைரவாஷ்டமி விழா வெகு விமரிசையாக நடைபெறும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் தகட்டூரை அடையலாம்.

மாதம் ஒரு அஷ்டமி

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு பெயர் உள்ளது. அதன்படி சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ‘ஸ்நாதனாஷ்டமி’ என்று அழைக்கப் படுகிறது. வைகாசி தேய்பிறை அஷ்டமி -சதாசிவாஷ்டமி, ஆனி - பகவதாஷ்டமி, ஆடி - நீலகண்டாஷ்டமி, ஆவணி - ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி - சம்புகாஷ்டமி, ஐப்பசி - ஈசான சிவாஷ்டமி, கார்த்திகை - கால பைரவாஷ்டமி, மார்கழி - சங்கராஷ்டமி, தை - தேவதாஷ்டமி, மாசி - மகேஸ்வராஷ்டமி, பங்குனி - திரியம்பகாஷ்டமி.

Next Story