அல்லாஹ்: இறைவனின் அருட்கொடைகள்


அல்லாஹ்: இறைவனின் அருட்கொடைகள்
x

இறைவன் மனிதனுக்கு எண்ணிலடங்கா அருட்கொடைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். கருவறையில் மனிதன் உருவாகும்போதே இறைவனின் அருட்கொடைகள் பொழியத் தொடங்கி விடுகின்றன.

கருவறையில் இருக்கும் அந்த சிசுவுக்கு என்னென்ன தேவைப்படுமோ அத்தனையையும் இறைவன் அங்கே கொடுக்கிறான். அதற்குத் தேவையான உணவு, எல்லாவற்றையும் அதற்கு கொடுத்து எந்த நேரத்தில் அது வெளிவருவதற்கு சரியான நேரமோ அந்த நேரத்தில் அதை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறான். இது இறைவனின் மிகப்பெரும் அருட்கொடையாகும். இந்த உலகமும் இதில் உள்ளவை அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.

அல்லாஹ் கூறுகின்றான்: "நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும் வெளிப்படையான மறைவான தன்னுடைய அருட்கொடைகளை உங்களுக்கு அவன் நிறைவாக்கித் தந்துள்ளான்". (திருக்குர்ஆன் 31:20).

மனிதன் இந்த உலகத்தில் வாழ்வதற்குண்டான அத்தனை வசதி வாய்ப்புகளையும், அவன் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையையும் இறைவன் ஏற்படுத்தி உள்ளான். இறைவனின் அருட்கொடைகள் பரந்து விரிந்தது, மிகவும் விசாலமானது. நமக்குக் கிடைத்திருக்கும் அனைத்தும் இறைவன் தந்ததுதான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம்". (திருக்குர்ஆன் 16:53).

நமக்குக் கிடைத்திருக்கும் அருட்கொடைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய உடல் உறுப்புக்களைக் குறித்து சிந்தித்தாலே புரியும் இறைவனின் அருட்கொடை எவ்வளவு பெரியது என்று.

"நாம் அவனுக்கு இரு கண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?" (திருக்குர்ஆன் 90:8,9) என இறைவன் கேட்கின்றான்.

இந்த உறுப்புக்களை நாம் எந்த வழியில் பயன்படுத்துகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாளை மறுமையில் அதைப் பற்றியும் கேட்கப்படும். எனவே நாம் இவற்றை நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும்.

அடுத்து இறைவன் நமக்குத் தந்த அருட்கொடை பொருள் செல்வம். இறைவன் நமக்கு எவ்வளவோ வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளான். அவற்றை நாம் எந்த வழிகளில் செலவு செய்கிறோம்?.

நபி நாயகம் (ஸல்) அவர்கள்: "நாளை மறுமையில் இந்தச் செல்வத்தை எப்படிச் சம்பாதித்தாய்? அதை எப்படிச் செலவு செய்தாய்? எனக் கேட்கப்படும்" என்றார்கள்.

எனவே இறைவன் அளித்த செல்வத்தை அவன் கூறியபடி நாம் செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவனுக்கு நாம் நன்றி செலுத்தியவர்களாக ஆவோம்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மிகப் பெரிய அருட்கொடைகள் திருக்குர்ஆனும், நபி பெருமானாரின் வழியுமாகும். நாம் இவ்விரு அருட்கொடைகளையும் நமது வாழ்க்கையில் பேணி அலங்கரிக்கின்றோமா?

இறைவன் கூறுகின்றான்: "அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணிவிட முடியாது". (திருக்குர்ஆன் 16:18).

அந்தளவு இறைவன் நமக்கு அருள்புரிந்துள்ளான். மனிதன் அந்த அருட்கொடைகளைக் குறித்து என்றாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? எனவே சிந்தித்துப் பார்த்து அந்த அருட்கொடைகளுக்குப் பகரமாக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அப்படி நன்றி செலுத்தினால் அவன் தன் அருட்கொடைகளை மேன்மேலும் அதிகப்படுத்துவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயமாக நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன். நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டணை மிகக்கடுமையானதாகும்" (திருக்குர்ஆன் 14:7).

நன்றி செலுத்தினால் கண்ணியம், உயர்வு, வெற்றி நிச்சயம். நன்றி கொன்றால் இழிவும், தாழ்வும் விதிக்கப்படும். முடிவு நம் கையில்!


Next Story