அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம்... பழனியில் இருந்து 200 பேர் சென்றனர்


அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம்... பழனியில் இருந்து 200 பேர் சென்றனர்
x

திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மண்டலத்தை சேர்ந்த 200 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

பழனி,

தமிழ்கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்று மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை கடந்த மாதம் தொடங்கியது.

இந்த பயணம் மேற்கொள்ளும் முதியோர்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான பயண செலவும் அரசு சார்பில் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் 2-ம் கட்ட பயணம், 3-ம் படைவீடான பழனியில் இருந்து நேற்று தொடங்கியது. பழனி கோவில் தண்டபாணி நிலையத்தில் பயண திட்ட நபர்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பழனி ஆர்.டி.ஓ. சரவணன் தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி, நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடி அசைத்து அனுப்பிவைத்தனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மண்டலத்தை சேர்ந்த 200 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

இந்த பயணத்தின்படி முதல்கட்டமாக அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி சென்று மீண்டும் பழனியில் தங்களது பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர்.


Next Story