பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்


பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்
x

சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர் காலபைரவர்.

சிவாலயங்கள் தோறும் இவருக்கு தனிச் சன்னிதியோ, அல்லது தனி இடமோ வழங்கப்பட்டிருக்கும். சிவனை தரிசிக்கச் செல்பவர்கள், இறுதியில் கால பைரவரை வணங்காமல் தரிசனம் முழுமை பெறாது. காசி மாநகரில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமானைப் போலவே, பைரவ மூர்த்திக்கும் 64 திருவடிவங்கள் உண்டு. கால பைரவர், எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. பைரவரின் எட்டு வடிவங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக பார்க்கலாம்.

பீஷன பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றம் இவர். அம்பாளைப் போல சிங்கத்தை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் கேது கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பலரும் தரிசனம் செய்கிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவர் வீற்றிருந்து அருள்செய்கிறார்.

அசிதாங்க பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் இவர். அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக, அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் இந்த பைரவர் அருள்செய்கிறார்.

ருரு பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றம் இவருடையது. சிவபெருமானைப் போலவே, ரிஷபத்தை தனது வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் சுக்ரனின் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள். இந்த பைரவர், காசி மாநகரில் உள்ள அனுமன் காட் பகுதி யில் வீற்றிருக்கிறார்.

சண்ட பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தியின் மூன்றாவது வடிவம் இது. இவர் முருகப்பெருமானைப் போல மயிலை வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் செவ்வாய் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கவுமாரி தேவி விளங்குகிறாள். இந்த பைரவருக்கான சன்னிதி, காசி மாநகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இருக்கிறது.

குரோதன பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவதாக வைத்து போற்றப்படுபவர் இவர். மகாவிஷ்ணுவைப் போல கருடனை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் சனிக்கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வழிபடுகின்றனா். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள். இந்த பைரவர் காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.

கபால பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது இடம் இவருக்கு. அன்னத்தை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் சந்திர கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.

உன்மத்த பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தியின் ஐந்தாவது தோற்றம் இவர். குதிரையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் புதன் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் இந்த பைரவர் வீற்றிருக்கிறார்.

சம்ஹார பைரவர்

அஷ்ட பைரவ மூர்த்தியில் எட்டாவது வடிவம் இவருடையது. நாயை வாகனமாகக் கொண்ட, இவரைத்தான் நாம் ஆலயங்கள் பலவற்றிலும் பார்க்கிறோம். நவக்கிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனா். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள். இப்பைரவரை காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலுக்குச் சென்றால் நாம் வழிபடலாம்.


Next Story