குழந்தை வரம் அருளும் வடசென்னிமலை முருகன்


குழந்தை வரம் அருளும் வடசென்னிமலை முருகன்
x

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது, வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில். முருகன் என்றாலே மலை மீது அமர்ந்து அருள்பாலிப்பவர்தான். அதன்படியே இங்குள்ள வடசென்னிமலை மீது இந்த பாலசுப்பிரமணியசாமி அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயம் குழந்தை வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது. மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வழியில், மலை அடிவாரத்தில் வரசக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி விட்டுதான், நாம் மலை மீது ஏற வேண்டும். முன்னதாக நம்மை வரவேற்கும் விதமாக, மலையடிவாரத்தில் வடசென்னிமலை கோவிலுக்கான நுழைவு வாசல் வளைவு இருக்கிறது. இதன் பின்புறத்தில் வடசென்னிமலையின் அழகிய தோற்றத்தை காணலாம். வரசக்தி விநாயகரை தரிசித்து விட்டு, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லலாம். சாலைமார்க்கமாக செல்லும் போது 5-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. படிக்கட்டு வழியாக செல்லும் போது அவ்வை சன்னிதி, உடும்பன் சன்னிதியைக் காணலாம்.

மலையை அடைந்ததும், கோவிலின் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம். இதைத்தொடர்ந்து 16 கால் மகா மண்டபம் உள்ளது. 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட இந்த மகா மண்டபம், கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மண்டபத்துக்குள் உற்சவர் பாலசுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் பாலதண்டாயுதபாணி உள்ளார். அதையடுத்து குழந்தை வடிவில் மூலவர் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு குழந்தை வடிவில் முருகன் இருப்பதால்தான், இந்தக் கோவிலில் குழந்தை இல்லாத தம்பதிகள் வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

இங்குள்ள முருகனிடம் வேண்டிக்கொண்ட பின், குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிைல வலம் வருவார்கள். இன்னும் சிலர் கோவில் தேரோட்டத்தின் போது, ஒருபுறம் குழந்தையின் பெற்றோர் நின்று கொண்டும், மறுபுறம் உறவினர்கள் நின்றும் குழந்தையை தேருக்கு முன்பாக தூக்கிப்போட்டு பிடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

இந்தக்கோவில் தோன்றிய வரலாற்றை பார்ப்போம்...

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, வடசென்னிமலை பகுதியைச் சுற்றிய கிராமங்களைச்சேர்ந்த சிறுவர்கள் மலை அடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அழகு மிகுந்த ஒரு சிறுவன், அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி ஓடுவதை அவர்கள் கண்டனர். அந்த சிறுவனை பின் தொடர்ந்து கிராமத்துச் சிறுவர்களும் சென்றனர். மலை உச்சியை அடைந்ததும் அந்தச் சிறுவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பேரொளிப் பிழம்புடன் மறைந்து விட்டான். இதைக் கண்ட கிராமத்து சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் இந்தக் காட்சியை ஊரில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும், சிறுவர்கள் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு வடிவமற்ற மூன்று சிலைகள் தோன்றி இருந்தன. அந்த இடத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து வழிபட்டதற்கான அறிகுறியும் காணப்பட்டன. இதனால் ஊர் பெரியவர்கள் "முருகப்பெருமான் இந்த இடத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார். எனவே அவருக்கு இங்கு கோவில் கட்டி வழிபடுவோம்" என்று முடிவு செய்தனர்.

பின்னர் மூன்று சிலைகளில் பெரியது முருகன் என்றும், சிறியவை இரண்டும் வள்ளி, தெய்வானை என்றும் கருதி ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த இடத்தை தூய்மைப் படுத்தி, சிலைகளைச் சுற்றி, கற்களை அடுக்கி வைத்து மறைவை ஏற்படுத்தினர். தொடர்ந்து சுற்று வட்டார கிராம மக்களின் முயற்சியால் அங்கு சிறு கோவில் கட்டப்பட்டது. தற்போது மகா மண்டபத்துடன் கோவில் அழகாக காட்சி அளிக்கிறது.

அமைவிடம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், தலைவாசலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வடசென்னிமலை அமைந்திருக்கிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் வடசென்னிமலை உள்ளது. ஆத்தூர், தலைவாசலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் காட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.


Next Story