பாரியூர் கொண்டத்து காளியம்மன் மலர் பல்லக்கு ஊர்வலம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அம்மன் மலர் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கடத்தூர்
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அம்மன் மலர் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்
கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 9-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 11-ந் தேதி மாவிளக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா கடந்த 12-ந் தேதி காலை 5.30 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
மலர் பல்லக்கு
கடந்த 14-ந் தேதி இரவு அம்மனின் மலர் பல்லக்கு ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இதையடுத்து அம்மனின் மலர் பல்லக்கு ஊர்வலமானது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் கோபியை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மலர் பல்லக்குக்கான நன்கொடையை கோபி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துரமணன், வழங்கி இருந்தார். கோபி, புதுப்பாளையம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் மஞ்சள் நீராட்டு விழா நேற்று தொடங்கியது. இந்த மஞ்சள் நீராட்டு விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 21-ந் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.






