பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலம்


பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலம்
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்

சிவகங்கை

திருப்பத்தூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

சந்தனகாப்பு அலங்காரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6-ம் திருவிழாவான கடந்த 27-ந் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. 9-ம் நாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக காலையில் திருத்தேருக்கு சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளினார்.

மாலையில் மூலவருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மூலவருக்கு சாத்தப்படும் என்பதால், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

மாலை 5 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பாக பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரிய தேரில் கற்பகவிநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். சண்டிகேசுவரர் தேரை பெண்களே இழுத்து வந்தனர். தேர் 4 வீதிகளையும் வலம் வந்து மாலை 6.30 மணிக்கு நிலையை அடைந்தது.

பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று(புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. காலையில் உற்சவர், தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பின்னர் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையலும், இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.

பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.


1 More update

Next Story