2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா


2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னிமலை   முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா
x

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

சென்னிமலை

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னிமலை முருகன் கோவில்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதற்காக அன்று காலை சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமிகள் படிக்கட்டுகள் வழியாக மலை கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நேற்று வரை 5 நாட்களும் உற்சவர் மற்றும் மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

நிறைவு நாளான நேற்று சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனே சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.

சூரசம்ஹார விழா

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து சாமிகள் படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து இரவு 7 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய புறப்பட்டார்.

அப்போது முருகப்பெருமானின் போர் படை தளபதி வீரபாகு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முன் சென்று, முதலில் மேற்கு ராஜ வீதியில் யானைமுகன் உருவத்தில் வந்த சூரனின் தலையை வதம் செய்தார். அதைத்தொடர்ந்து வடக்கு ராஜ வீதியில் நடைபெற்ற போரில் சிங்கமுக சூரனையும், கிழக்கு ராஜ வீதியில் நடைபெற்ற போரில் வானுகோபன் சூரனையும் வதம் செய்தார். இறுதியாக தெற்கு ராஜ வீதியில் சூரபத்மனுடன் உச்சகட்ட போர் நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் நேரடியாக களத்தில் இறங்கி சூரபத்மனின் தலையை தன்னுடைய வேலால் வதம் செய்தார். அப்போது வாண வேடிக்கைகள் முழங்க திரளான பக்தர்கள் "முருகனுக்கு அரோகா, கந்தனுக்கு அரோகரா, வேலவனுக்கு அரோகரா" என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருக்கல்யாணம்

இதைத்தொடர்ந்து வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சாமிகள் கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெறவில்லை. அதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story