ஆன்மிக பாதையில் செல்ல குரு அவசியமா..?


Guru Essential For Spiritual Journey
x

உபநிஷதங்கள், வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றின் உட்கருத்துப்படி ஆன்மிக வாழ்வில் ஈடுபட விரும்பும் அனைவருமே ஒரு குருவின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும்.

தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவர் எவ்வளவு அதிகமாகவும், நுட்பமாகவும் வளர்ச்சி அடைகிறாரோ அதே அளவுக்கு அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் சம அளவில் வளர்ச்சி அடைகின்றன. அதனால்தான் நமது சான்றோர் பெருமக்கள் எளிமையாக வாழ வேண்டும் என தெரிவித்தார்கள்.

மனம், வாக்கு, காயம் என்ற உடல் ஆகியவற்றில் எளிமையை கடைப்பிடித்தால் நாம் சந்திக்கும் சிக்கல்களும் எளிமையாகவே இருக்கும் என்ற ஆன்மிக உளவியலின் அடிப்படையில் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் எளிமையை கடைப்பிடிக்கவே சான்றோர்கள் வற்புறுத்தினர்.

இக்காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் ஆன்மிக ஞானம் பெறலாம் என்று பலரும் நம்புகிறார்கள். நீச்சல் பழக விரும்புபவர் நன்றாக நீச்சல் தெரிந்த ஒருவரிடம் அதை நேருக்கு நேராக கற்றறிய முடியும். அதுபோல ஒரு குருவிடமிருந்து ஆன்மிக பாதையில் செல்வதற்கான அனுமதி மற்றும் வழிமுறை ஆகியவற்றை முறையாக கற்றவரே மற்றொருவரின் கைகளைப் பிடித்து அந்த பாதையில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முடியும்.

உள்ளத்தின் உள்ளே பயணிக்கும் ஆன்மிக பெருவழி என்பது நடுக்கடலில் நீந்தும் அனுபவமாகும். நாலாபக்கமும் நீர்ப்பரப்பாக உள்ள நிலையில் எந்தப்பக்கம் கரை என்ற நிலையில் எவ்வளவு நேரம் நீந்த வேண்டும், எவ்வளவு தூரம் நீந்த வேண்டும் என்பதும் தெரியாத நிலையில்தான் அருகிலிருந்து வழிகாட்ட அனுபவம் பெற்ற குரு தேவைப்படுகிறார்.

ஒரு உண்மையான சீடர் தனது குருவை ஆர்வமாக தேடுகிறார் என்றும், அதேபோல ஒரு ஆன்மிக குரு தனக்குரிய சீடனை ஆர்வமாக தேடுகிறார் என்றும் இந்திய ஆன்மிக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. உபநிஷதங்கள், வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றின் உட்கருத்துப்படி ஆன்மிக வாழ்வில் ஈடுபட விரும்பும் அனைவருமே ஒரு குருவின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும்.

நமது சாஸ்திரங்கள் ஆன்மிக வழிகாட்டும் குருமார்களை ருத்ர சம்பிரதாயம், ஸ்ரீ சம்பிரதாயம், குமார சம்பிரதாயம், பிரம்ம சம்பிரதாயம் ஆகிய நான்கு பிரிவுகளில் இருந்தும் தேர்வு செய்து கொள்ள வழி காட்டுகிறது. இந்த நான்கு தத்துவங்களை சார்ந்த ஆன்மிக சான்றோர்களை அணுகி ஆன்மிக வாழ்வில் வழிகாட்ட வேண்டுவது நமது ஆன்மிக மரபாகும்.

அது தவிர ஒருவரது மனம், இதயம், அறிவு ஆகிய மூன்று நிலைகளிலும் எவ்வித முரண்பாடுகளும் இல்லாத ஆன்மிக வழிகாட்டுதலை அளிக்கும் ஆன்ம நெறியாளர்களையும் ஒருவர் தனது ஆன்ம குருவாக ஏற்பதும் நமது ஆன்மிக பாரம்பரியமாகும்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்


Next Story