சிறந்த வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்...


சிறந்த வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்...
x

மனிதன் தன் வசதியான வாழ்விற்காக எந்திரங்களையும், அதிவேக போக்குவரத்தையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் கண்டுபிடித்தான். நவீன வசதிகள் பெருகிய பிறகு அவனது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் அதற்குப்பதிலாக அவனது பொறுமை, சகிப்புத்தன்மை, கொடைத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை காணாமல் போய்விட்டது.

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வது, பொறாமை கொள்வது, பொறுமை இன்றி நடந்து கொள்வது, எந்த செயலிலும் பதற்றம், பரபரப்பு என்று செயல்படுவது.... என மனிதனின் மனமும், வாழ்க்கையும் எந்திரத்தன மாகிவிட்டது. தன்னுடைய தீய செயல் களாலே தனக்குத்தானே தீங்கு விளைவித்துக்கொள்கின்றான் இன்றைய மனிதன். இதனால் அவனது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வைத்தேடி மருத்துவத்தை நாடுகின்றான். மன நல ஆலோசகர்களை நாடி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து நிம்மதியை தேடுகின்றான். மருந்து மாத்திரைகளை நாடி நோயாளி ஆகின்றான்.

உள்ளம் தெளிவாக இருந்தால் எண்ணங்களும், செயல்களும் தெளிவாக இருக்கும். செயல்கள் தெளிவாக இருந்தால் அவனது வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். இத்தகைய சிறந்த வாழ்வுக்கு இஸ்லாம் அழகாக வழிகாட்டுகிறது. சந்தேகமான எண்ணங்களில் இருந்து விலகி இருத்தல், பிறர் மீது பொறாமை கொள்ளாமல், புறங்கூறாமல் இருத்தல் போன்றவை நிம்மதியான வாழ்வுக்கு அடித்தளம் ஆகும். இதையே பின்வரும் திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது:

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 49:12).

வாழ்க்கையில் எது நடந்தாலும் அது இறைவனின் கட்டளைப்படியே நடக்கிறது என்ற இறையச்சமும், இறை நம்பிக்கையும் தேவை. ஏக இறைவனான அல்லாஹ்வை நாம் முழுமையாக அடிபணிந்து சரண் அடையும் போது நமது மனம் அமைதி பெறும். இறை சிந்தனையிலும், இறைவனை நினைவுகூர்வதிலும், இறைவழிபாட்டிலும், இறைவன் வகுத்த வழியில் வாழ்க்கையை நடத்தும் போதும் நம்மை எந்த துன்பமும் எட்டிப்பார்க்காது. வந்த துன்பமும் நம்மை தடுமாறச்செய்யாது. துன்பங்களை தாண்டிச்செல்லும் பக்குவத்தை இறையருளால் பெறமுடியும். இதையே பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

"அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் எவரையும் வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை சகிப்பு, பொறுமை என்ற நேரான வழியில் நடத்துகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்".

"அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால், நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன்னுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்".

"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மீதே பொறுப்பை ஒப்படையுங்கள்". (திருக்குர்ஆன் 64:11-13)

அந்த ஏக இறைவனை முழுமையாக சரண் அடைந்து இறையருளையும், அமைதியான, ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்க்கை யையும் நாம் அனைவரும் பெறுவோம், ஆமின்.

பேராசிரியர் அ. முகம்மது அப்துல்காதர், சென்னை.


Next Story