ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தரிசனம்... திருமலை மாடவீதிகளில் வலம் வந்த உக்ர சீனிவாசமூர்த்தி


ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தரிசனம்... திருமலை மாடவீதிகளில் வலம் வந்த உக்ர சீனிவாசமூர்த்தி
x

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால், உக்ர சீனிவாசமூர்த்தியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால், உக்ர சீனிவாசமூர்த்தியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மகாவிஷ்ணு ஆசாட மாதம் சுக்கல ஏகாதசி அன்று சயன கோலத்துக்குச் செல்வார். அப்போது சயன கோலத்துக்குச் சென்றவர், கைசிக துவாதசி அன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி விழா கொண்டாடப்படுகிறது.

உக்ர சீனிவாசமூர்த்திக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் இவருக்கு பெயருண்டு. 14ம் நுாற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர் இவரே. சூரிய ஒளி மேனியில் பட்டால் உக்ரம் அடைவார் என்பதால், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசியன்று அதிகாலையில் மட்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த ஒரு குறிப்பிட்ட நாளில் (கைசிக துவாதசி) மட்டுமே, உக்ர சீனிவாசமூர்த்தி (உற்சவர்) கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறார்.

சூரியக் கதிர்கள் உக்ர சீனிவாசமூர்த்தியை தொடக்கூடாது என்பதால், இந்த விழா பாரம்பரியம் மாறாமல், அதிகாலையில் தொடங்கி சூரிய உதயத்திற்கு முன்பாக முடிவடைகிறது.


Next Story