காலிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்


காலிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
x

காலிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினாா்கள்.

ஈரோடு

பவானி

பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து பெண்கள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். இதை முன்னிட்டு தாட்ஷாயிணி அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலையில் காலிங்கராயன்பாளையம் சித்திவிநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள், அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக 15 அடி நீள வேல் அலகு, உயரத்தில் பறந்த விமான அலகு குத்தியும் வித்தியாசமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனால் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு் விழா நடக்கிறது.

1 More update

Next Story