வாழ்வை முன்னேற்றும் கல்யாண விகிர்தீஸ்வரர்


வாழ்வை முன்னேற்றும் கல்யாண விகிர்தீஸ்வரர்
x

கரூர் மாவட்டத்தில் உள்ளது வெஞ்சமாங்கூடலூர் என்ற ஊர். இங்குள்ள கல்யாண விகிர்தீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

தேவாரமும், திருப்புகழும் பாடப்பெற்ற ஆலயம் இது. ஈசனின் மீது சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பாடலையும், முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலையும் பாடியிருக்கின்றனர்.

கருவறையில் மூலவரான கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்கிறார்.

'விகிர்தீஸ்வரர்' என்பதற்கு 'நன்மை தருபவர்' என்று பொருள். இவரை வழிபடுபவர்களுக்கு, பாவங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது, படிகளில் ஏறிச்செல்லும் வகையில் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள், இத்தல இறைவனை வணங்கிவிட்டு திரும்பும்போதே, வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த படிக்கட்டுகள் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், பொன் வேண்டி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்காக, தன்னுடைய இரண்டு மகன் களையும் விற்று, அதில் கிடைத்த பொன்னை வழங்கியுள்ளார் சிவபெருமான்.

தன் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாருக்காக, தன்னுடைய பிள்ளைகளையே விற்பனை செய்தவர் இத்தல ஈசன். எனவே இங்கு வந்து வேண்டிக்கொண்டால் நண்பர்களின் ஒற்றுமை ஓங்கும். வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

ஆலய பிரகாரத்தில் ஆறு முகங்களுடன் தனிச் சன்னிதியில், வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.

மனைவியர்களோடு வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை மேம்படும். பிரிந்து வாழும் தம்பதியர், இத்தல முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வழிபட்டால், விரைவில் தம்பதியர் சேரும் வரம் வாய்க்கும்.

கவுதம மகரிஷியின் தோற்றத்தில் வந்து அவரது மனைவியான அகலிகையை அடைந்த காரணத்தால், இந்திரன் சாபத்திற்கு உள்ளானான். அந்த சாபம் நீங்குவதற்காக பல சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து வந்தான். ஆனால் அவனுக்கு இத்தலத்தில்தான் சாபம் நீங்கப்பெற்றது.

பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறியதும், இறைவனுக்கும் இறைவிக்கும் பால் அபிஷேகம் செய்தும், திருக்கல்யாணம் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்க, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். மேலும் பெண்களின் சாபம் நீங்கவும் இத்தல இறை வழிபாடு சிறப்பானது.

மூலவர்: கல்யாண விகிர்தீஸ்வரர்

உற்சவர்: சோமாஸ்கந்தர்

அம்மன்: பண்ணேர் பொழியம்மை, மதுரபாஷினி

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: குடகனாறு

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கண்டனூர். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால், மேற்கு வெஞ்சமாங்கூடலூரை அடையலாம். இங்குதான் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் இருக்கிறது.


Next Story