கற்கடேஸ்வரர் ஆலயம் - கதை சொல்லும் சிற்பம்

கும்பகோணம் அடுத்துள்ளது, திருந்துதேவன்குடி. இங்கு கற்கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் தல வரலாற்றை சொல்லும் சிற்பங்களில் ஒன்றைத்தான் (சிவலிங்கத்தை பூஜிக்கும் நண்டு) இங்கே பார்க்கிறீர்கள்.
கோபத்திற்கு பெயர் பெற்றவர், துர்வாச முனிவர். அவர் ஒரு முறை தல யாத்திரை மேற்கொண்டார். வழியில் அவரைக் கண்ட கந்தர்வன் ஒருவன், "முனிவரே.. நீங்கள் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர்கள்" என்று கூறினான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், "நீ நண்டாகப் பிறப்பாய்" என்று சாபமளித்தார். தான் அளித்த சாபத்திற்கு விமோசனமாக, இத்தலத்தினை குறிப்பிட்டு அங்கு தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்யும்படி துர்வாசர் அருளினார்.
அதன்படி நண்டு உருவில் இருந்த கந்தர்வன், இத்தலம் வந்தான். அதே வேளையில் இத்தலத்தில் இந்திரன் தன்னுடைய சாபம் நீங்குவதற்காக, சிவனுக்கு 1008 தாமரை மலர் கொண்டு பூஜை செய்து வந்தான். அதில் இருந்து ஒரு தாமரை மலரை எடுத்து, நண்டும் சிவனை பூஜித்து வந்தது. தான் செய்யும் பூஜையில் தினமும் ஒரு தாமரை குறைவதை எண்ணி வருந்திய இந்திரன், அதற்கு காரணம் நண்டு என்பதை அறிந்தான். ஒரு நாள் சிவலிங்கத்தின் மீது அமர்ந்து பூஜித்துக் கொண்டிருந்த நண்டை, தன்னுடைய வாள் கொண்டு வெட்ட முயன்றான், தேவேந்திரன்.
அப்போது நண்டு, சிவலிங்கத்தின் பாணத்தில் இருந்த வளைக்குள் சென்று ஒளிந்துகொண்டது. இதனால் இந்திரன் வீசிய வாள், சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் பரிதவித்துப் போன இந்திரன், தன்னுடைய தவறை எண்ணி வருந்தித் திருந்தினான். இதனாலேயே இந்த திருத்தலத்திற்கு 'திருந்துதேவன்குடி' என்று பெயர் வந்தது. நண்டு வழிபட்ட தலம் என்பதால் இத்தல இறைவன் 'கற்கடேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் புறவழிச்சாலையில் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, திருவிசநல்லூர் திருத்தலம். இங்கிருந்து 1 கிலோமீட்டர் சென்றால் திருந்துதேவன்குடிைய அடையலாம்.






