அருணகிரிநாதர் தவமியற்றிய குமரகிரி கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இருந்து தெற்கே, ஒரு மலைக்குன்றின் மீது குமரகிரி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைய, போளூரில் உள்ள சம்பத்கிரி மலை மீதுள்ள பழமையான சுயம்பு லட்சுமி நரசிம்ம மூர்த்தியே காரணம்.
சம்பத்கிரி மலை மீது யானை குகை உள்ளது. அதில் புலஸ்திய மகரிஷி தவமியற்றியதால், 'புலஸ்தியபுரம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் புலஸ்தியர், பல ஆன்மிக தொண்டுகளை செய்துள்ளார். 'சம்பத்' என்றால் 'பொருள்' என்றும் கூறப்படுகிறது. சம்பத்கிரி மலைக்கு கீழே அமைந்த ஊர், 'பொருளூர்' என்று அழைக்கப்பட்டு, அது மருவி தற்போது 'போளூர்' என்று வழக்கத்தில் உள்ளது.
இந்த ஊரில் வெட்டவெளி சுவாமிகள், அச்சுததாச சுவாமிகள், பெரும்சித்தர் விட்டோபா சுவாமிகள் போன்ற மகான்கள் வாழ்ந்துள்ளனர். ஒரு முறை இந்த ஊர் வழியாக அருணகிரிநாதர் சென்றுள்ளார். அப்போது இந்த ஊர் பெருமையை அறிந்து, போளூருக்கு தெற்கே இருக்கும் நரிக்குன்று மலை மீது மூன்று நாட்கள் தங்கியிருந்து தவம் இயற்றினார். மேலும் முருகப்பெருமானை நினைத்து மூன்று பாடல்களை பாடியிருக்கிறார். அந்த மூன்று பாடல்களும் நரிக்குன்றின் மீது முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் அமைய வேண்டும் என்பதைச் சொல்வதாக பொருள் தந்துள்ளது.
இந்த நிலையில் போளூர் சம்பத்கிரி மலையில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு, போளூரை சேர்ந்த பக்தர்கள் சிலர் பவுர்ணமி பூஜை செய்து வந்தனர். அப்போது அந்த பக்தர்களின் மனதில், நரிக்குன்று மலையில் அருணகிரிநாதர் தவமியற்றிய இடத்தில் ஒரு முருகன் கோவிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. பின்னர் போளூர் சுயம்பு நரசிம்மருக்கு செய்வதைப் போல, நரிக்குன்று மலை மீது அருணகிரிநாதர் தவம் இருந்த இடத்திலும் அந்த பக்தர்கள், முருகனை நினைத்து பவுர்ணமி பூஜை செய்து வந்துள்ளனர். அதே நேரம் பக்தர்கள் மற்றும் ஊர் மக்களின் விடாமுயற்சியால் நரிக்குன்று மலையின் காடுகளை சீர்திருத்தி, முதலில் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். நரிக்குன்று என்பது `நற்குன்று' என்று மாறியது.
அதன்பிறகு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. கோவில் கட்டியபிறகு, இந்த ஆலயம் குமரகிரி நற்குண்டு பாலமுருகன் கோவில் என்று பெயர் பெற்றது. கடந்த 2001-ம் ஆண்டு இந்த ஆலயத்திற்கு சென்னை ஓம் முருகாசிரமம் சங்கராந்தா சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆலய அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலம் சங்கராந்தா சுவாமிகள், பாம்பன் அருள் சித்தர் தவராஜயோகி சஞ்சீவி ராஜ சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலுக்கு வரும் பக்தர்களை நுழைவுவாசல் வரவேற்கிறது. கோவிலில் வள்ளி - தெய்வானை சமேத முருகன் சிலைகள் சுதை சிற்பமாக உள்ளது. நாக தேவதைகள், சப்த கன்னியர், பால விநாயகர், ஸ்கந்த மாதா துர்க்கையம்மன், ஞான சக்தா சுவாமி, மலேசியா முருகன், இடும்பன், கடம்பன், மாணிக்க விநாயகர், காசி விஸ்வநாதர் ஆகிய உப தெய்வங்கள் இருக்க, மூலவர் குமரகிரி பாலமுருகன் கருணை முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சண்டிகேஸ்வரர், வேப்பமரத்து புற்று அம்மன், வன்னிமர விநாயகர் ஆகியோரும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதப்பிறப்பு, கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி உற்சவம் நடந்து வருகிறது. கோவிலில் வைகாசி விசாகம் அன்று முருகன் பிறந்தநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காசி விஸ்வநாதருக்கு பிரதோஷம் அன்று மாலை சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. ஆடிக்கிருத்திகை பெருவிழா, பரணி கிருத்திகை அன்று காலை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அன்று காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 6 மணியளவில் உற்சவர் சுப்பிரமணியசாமி வள்ளி- தெய்வானை சமேதராக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அப்போது பம்பை, உடுக்கை, நாதஸ்வரத்துடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கும்.
கோவிலில் கந்தசஷ்டி விழா
10 நாட்கள் நடக்கிறது. கந்தசஷ்டி அன்று போளூர் சோமநாதீஸ்வர் கோவிலில் இருந்து பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பால்குடம் எடுத்து நாதஸ்வரம், உடுக்கை, பம்பை இசை முழங்க போளூர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வீர ஆஞ்சநேயர் (தீயணைப்பு நிலையம்) கோவில் வந்து கோமாதா பூஜை செய்து, அங்கிருந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைவர். கோவிலில் பாலமுருகன், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடக்கும். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு போளூர் சம்பத்கிரி மலை அடிவாரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து தீப எண்ணெய்யுடன் முக்கிய வீதிகளில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக நற்குன்று மலை மீது ஏறி மகா தீபம் மாலை 6 மணியளவில் ஏற்றப்படும். தை மாதம் தைப்பூசம் அன்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷே ஆராதனை நடக்கும். அதை முன்னிட்டு போளூர் வீரப்பன் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து நாதஸ்வரம், பம்பை முழங்க பஜனை கோஷ்டிகள் பக்தி பாடல்களை பாட, ஆடல் பாடல் நிகழ்ச்சி களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து படிகளுக்கு பூஜை செய்து மகா தீபாராதனை நடக்கும். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணிக்குமேல் வள்ளி, தெய்வானை, முருகன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் நடக்கும். பாலமுருகன், வள்ளி, தெய்வாைனக்கு காலை அபிஷேக, ஆராதனை, மதியம் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடக்கும். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசாமி திருக்கல்யாண கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதுதவிர பால விநாயகர் சதுர்த்தி, ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்த சஷ்டி பால்குட விழா, தைப்பூச படி விழா மற்றும் அன்னதானம், தைக்கிருத்திகை விழா, பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா, பங்குனி உத்திர திருக்கல்யாண வீதி உலா, மாதாந்திர கிருத்திகை, ஆங்கில புத்தாண்டு விழா ஆகியவை நடக்கிறது.