கம்பீரமான மணற்கல் சிற்பம்


கம்பீரமான மணற்கல் சிற்பம்
x

திருமாலின் முக்கியமான 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக இருப்பது, வராக அவதாரம். பூமியை திருடிக்கொண்டு போய், கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான், இரண்யாட்சன் என்ற அசுரன். இதனால் சூரிய வெளிச்சம் இன்றி பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. இதையடுத்து திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனுடன் போரிட்டு, கடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியை மீட்டுக் கொண்டு வந்ததாக புராணம் சொல்கிறது.

இந்த நிகழ்வை சொல்லும் வகையில் வராகமூர்த்தி சிலைகள் ஏராளமாக வடிக்கப்பட்டிருப்பதை, இந்திய தேசம் முழுவதுமே நாம் பார்க்க முடியும். அப்படி ஒரு சிலை, மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான நகரம் மற்றும் தொல்பொருள் தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஈரான் என்ற அந்த இடம், 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் குப்தர்கள் கால கோவில்கள் அமைந்த பகுதியாக இருந்துள்ளது.

இந்த சிலையானது மணல்கற்கள் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. தலையை இடதுபுறமாக திரும்பியபடி வலது காலை நிலத்திலும், இடதுகாலை ஒரு உயரமான இடத்திலும் தூக்கி வைத்து, அதன்மேல் தன்னுடைய இடது கையை வைத்து கம்பீரமாக காட்சி தருகிறார், இந்த வராகப்பெருமான். இவரது வாய்ப் பகுதியில் இருக்கும் சிறிய கொம்பினை, தனது கரங்களால் தாங்கிக்கொண்டு தொங்கியபடி பூமாதேவி பெண் வடிவத்தில் காட்சியளிக்கிறார்.

இந்த சிற்பம் தற்போது, மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story