நவராத்திரி சப்பர வீதி உலா

செங்கோட்டையில் முப்புடாதி அம்மன் கோவில் நவராத்திரி சப்பர வீதி உலா நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் முப்புடாதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த திங்கட்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில் முப்புடாதி அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவு வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் முப்புடாதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சப்பரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. இதனைதொடா்ந்து அம்மனுக்கு வண்ண மலா்களால் புஷ்பாஞ்சலி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை யாதவா் (கரையாளா்) சமுதாய நிர்வாகிகள், விழா கமிட்டியினா் சிறப்பாக செய்திருந்தனா்.






