சென்னிமலை அருகே உள்ளநஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா


சென்னிமலை அருகே உள்ளநஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா
x

சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நஞ்சுண்டேஸ்வரர்

சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுயம்பு லிங்கம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத திங்கட்கிழமைகள் மற்றும் கார்த்திகை மாதத்தில் 2-வது திங்கட்கிழமை மட்டும் கோவில் நடை திறந்து பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

கண் நோய், தோல் நோய் உள்ளவர்கள் பங்குனி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து இந்த கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், புருடு உள்ளிட்ட பொருட்களை வாங்கி நஞ்சுண்டேஸ்வரருக்கு காணிக்கையாக வழங்கினால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சாமி தரிசனம்

இந்த ஆண்டின் பங்குனி மாத திருவிழா முதல் திங்கட்கிழமையான நேற்று நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் வரத்தொடங்கினார்கள்.

ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தார்கள். நள்ளிரவு 2 மணி முதல் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெற்றி வேலாயுத சாமி கோவில் செயல் அலுவலர் மாலதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினத்தந்தி செய்தி எதிரொலியாக...

நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள கழிப்பறைகளில் கதவுகள் இல்லாதது குறித்து கடந்த 7-ந் தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கழிப்பறைகளில் கதவுகள் பொருத்தப்பட்டது.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திருவிழா சமயத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக இதுவரை வெளிப்படையாக ஏலம் விடப்பட்டு வந்தது. இதில் நஞ்சுண்டாபுரம் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏலம் எடுத்து தங்களது நிலத்தை வாகனங்கள் நிறுத்துவதற்காக பக்தர்களுக்கு கொடுத்து வந்தனர். மேலும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு மறைமுக ஏலம் நடைபெற்றதால் உள்ளூர் மக்கள் ஏலம் எடுக்க முடியவில்லை. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததால் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இணைந்து செயல்பட கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராசு என்கிற தங்கவேல் கூறுகையில், "ஆண்டாண்டு காலமாக நஞ்சுண்டாபுரம் ஊர் பொதுமக்கள் தான் வாகனம் நிறுத்துவதற்கான ஏலம் எடுத்து வந்தனர். இதில் செலவு தொகை போக மீதம் ஆகும் பணத்தை உள்ளூர் கோவில் பராமரிப்பிற்காக பயன்படுத்தி வந்தனர். திருவிழா சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து கார்களில் வருவதால் அவைகளை நிறுத்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களை வழங்கி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு உள்ளூர் மக்களுக்கு ஏலம் கிடைக்காததால் கார்களை நிறுத்த போதுமான வசதி இல்லாமல் ரோட்டின் இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பஸ்கள் அனைத்தும் 1 கி.மீ தொலைவில் உள்ள ஆலமரம் என்ற இடத்திலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகிறது. இங்கிருந்து குழந்தைகள், பெண்கள், வயதானோர் என அனைவரும் சிரமத்துடன் நடந்தே கோவிலுக்கு வருகின்றனர். அதனால் இனி வரும் காலங்களில் உள்ளூர் மக்களுடன் இணைந்து கோவில் நிர்வாகம் செயல்பட வேண்டும்" என்றார்.


Related Tags :
Next Story