மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் வெள்ளம் நேற்று முழுவதும் அலை மோதியது.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் மாசி திருவிழா கடந்த 3 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது. விழாவின் ஆறாம் திருவிழாவன்று இரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜை நடைபெற்றது. இப்பூஜை வருடத்தில் மூன்று முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மாசித்திருவிழாவின் ஆறாம் நாள் மற்றும் பரணி கொடைவிழாவன்றும் இப்பூஜை நடைபெறும்.

விழாவின் 9 ம் திருவிழாவன்று இரவு 9:30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும்,பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும் நடந்தது. நேற்று மண்டைக்காடு கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத் தொடங்கினார்கள். ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூட்டம் கூட்டமாக இருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் வெள்ளம் நேற்று முழுவதும் அலை மோதியது.

நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. 3-30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும்,4-30 மணிக்கு அடியந்திரபூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கரதேர் உலா வருதலும் 6-30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை இருந்தும் நடந்தது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், இரவு 9-30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.

நள்ளிரவில் 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டு வரப்பட்டது. 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப்பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோவிலை சுற்றி அதிகமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. தீபாராதனை நடந்து கொண்டிருக்கும் போது கோவில் கொடிமரத்தில் கொடி இறக்கப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் 200 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கியது. நேற்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.


Next Story