பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் ‘தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் 'தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது. அதாவது கோடை வெயில் உக்கிரமாக உள்ள பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு ஆகும். குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

பல்வேறு சிறப்புக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 18-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையடுத்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.


Next Story