வளம் தரும் வழிபாடு


வளம் தரும் வழிபாடு
x

* சிவன் கோவிலில் இருக்கும் தல விருட்சங்களுக்கு சக்தி அதிகம். சிவாலயத்தில் இருக்கும் வன்னி மரம் அல்லது வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது பிரச்சினைகளைத் தெரிவித்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய தல விருட்சங்களுக்கு நாம் கூறுவதைக் கேட்கும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.

* இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை ராகு கால வேளையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, செவ்வரளிப்பூ சூட்டி, அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி தம்பதியரின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட தம்பதியர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

* குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் அது சரியாகும். இது ரிஷிகள் கூறிய எளிய பரிகாரமாகும்.

* அதிக கடன் பிரச்சினையில் அவதிப்படுபவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லை, பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, திருமணத் தடை போன்றவை விலகும். இது தவிர திருஷ்டி, செய்வினை போன்றவை நீங்குவதற்கு, ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து வழிபடலாம்.

* சக்கரத்தாழ்வார் சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள், நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், தொழில் விருத்தி ஏற்படும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வராமல் இருக்கும் கடன் தொகை வசூலாகும். கொடுத்த கடன் வசூலாக, பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்யலாம்.

* பிரதோஷ காலத்தில், ரிஷப வாகனத்தில் அருளும் அம்பாளையும், ஈசனையும் வழிபாடு செய்தவர்கள், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். அதிலும் ஈசான்ய மூலையில் சிவபெருமானுக்கு தீபாராதனைக் காட்டும் போது தரிசனம் செய்தால் நோய்களும், வறுமையும் நீங்கும்.

* மாதந்தோறும் வரும் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 11 மாதங்கள் செய்ய வேண்டும்.


Next Story