சீரான வாழ்வருளும் சித்தாத்தூர் மாரியம்மன்


சீரான வாழ்வருளும் சித்தாத்தூர் மாரியம்மன்
x

அம்மன் கோவில்கள் அதிகம் நிறைந்த மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம். புராண காலம் தொட்டே இங்கு அம்மனின் அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் படைவீடு ரேணுகாம்பாள் ஆலயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த அம்பிகையைத் தொட்டே அகிலமெங்கும் சிரசு வழிபாடு இன்றும் சிறப்புற நடைபெற்று வருகின்றது. அப்படிப்பட்ட அன்னையின் அம்சமாக சித்தாத்தூர் என்னும் ஊரில் ஸ்ரீ மாரியம்மன் என்கிற பெயரில், அம்பிகை இன்றும் அற்புதங்கள் பலவற்றை நடத்தி வருகின்றாள்.

சித்தர்கள் பலர் வாழ்ந்த, வாழும் பூமியாக கருதப்படும் இந்த சித்தாத்தூரில், ஒரு சமயம் அன்னை ரேணுகாதேவி கோவில் கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் இங்கு நாகமாக உலவித் திரிந்தாள். ஒருநாள் நாகமாக சுற்றிவந்த அம்பிகையின் நாவில் முள் தைத்துவிட்டது. அப்போது வாழைப்பந்தல் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர், பனை மரத்தடியில் தன் மாட்டை கட்டி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த நாகம், "நானே அன்னை ரேணுகை. நாக வடிவில் உள்ளேன். என் நாவில் முள் தைத்துவிட்டது. அதை எடுத்து விடுவாயா?" என்று கேட்டது.

உடனே அந்தப் பெரியவர் எந்த தயக்கமோ, பயமோ இல்லாமல், அந்த நாகத்தின் நாவில் இருந்த முள்ளை எடுத்துவிட்டார். படமெடுத்து ஆடிய அந்த நாகம், அவருடைய வம்சத்தையே தான் காத்தருள்வதாக வாக்களித்துவிட்டு மறைந்தது. பின்னர் அந்தப் பெரியவர் குடும்பத்தோடு சித்தாத்தூாில் வந்து வாழ ஆரம்பித்தார். அம்மனை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டார். நாகமாக முதலில் இங்கே வாழ்ந்த அன்னை ரேணுகாதேவி பல காலத்திற்கு முன்பே கற்சிலையாக மண்ணுள் புதையுண்டு கிடந்தாள். வயலில் ஏர் உழும்போது ஏர்க் கலப்பையில் தட்டுப்பட்டு, வெளியேக் கொண்டுவரப்பட்டாள். அதுமுதல் அவளிடம் சரணடைந்தோரது வாழ்வில் சாதனைகள் பலவற்றை புரிந்து வருகின்றாள்.

தற்போது பெங்களூருவில் வசிக்கும் அந்த பெரியவரின் வம்சாவளியினர் இன்றும் இங்கு வரும்போது அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த அன்னை, தமிழகமெங்கும் பலருக்கும் குலதெய்வமாக திகழ்கின்றாள். தம் குலதெய்வம் எதுவென்று அறியாத பலர் கனவில், இந்த மாரியம்மன் தோன்றி, சித்தாத்தூர் வரும்படி கூறி மறைகின்றாள். அதனால் இன்றும் சில பக்தர்கள் தன் குலதெய்வமான இந்த அம்மனை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மெய் சிலிர்க்கின்றனர். கண்ணீர் மல்க அம்மனை வழிபட்டு, ஆனந்தம் அடைகின்றனர்.

ஊர் எல்லையில் வயல் பரப்பின் நடுவே அற்புதமாக கோவில் கொண்டிருக்கிறாள், சித்தாத்தூர் ஸ்ரீ மாரியம்மன். ஒரே திருச்சுற்றினைக் கொண்டு தனி விமானத்துடன் திகழ்கின்றது இந்த ஆலயம். கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த அம்மனையும், கீழே மூன்று சிரசு அம்மன்களையும் கண்டு வணங்கலாம். இவற்றில் வலப்புறம் இருப்பது வயல்வெளியில் கிடைத்த அம்மனாகும். இந்த தரிசனத்தில் ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆகாய சக்தியெல்லாம் இங்கே ஒன்றுகூட, பார்வதி சொரூபமாக அருள்மழை பொழிகின்றாள் ஸ்ரீ மாரியம்மன். சித்தர்கள் பலர் இன்றும் இங்கு வந்து இரவில் அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இத்தல அம்மனை 'எட்டியம்மன்' என்றும் அழைக்கிறார்கள்.

எண்ணற்றோர் வாழ்வில் அற்புதங்களையும், திருப்பங்களையும் நிகழ்த்தும் இந்த அம்மனுக்கு, ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர். தைப்பொங்கல் அன்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், இந்த அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, அபிஷேக - அலங்கார - ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள கிணறு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் கனவில் நாகமாக வந்து மறைவாளாம். அதை உணர்ந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வந்து நேர்த்திக்கடனை செலுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஆரணியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சித் தாத்தூர் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இங்குள்ள கிணறு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் கனவில் நாகமாக வந்து மறைவாளாம். அதை உணர்ந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வந்து நேர்த்திக்கடனை செலுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.

- பழங்காமூர் மோ.கணேஷ்.


Next Story