வாழ்வை வளமாக்கும் எளிய பரிகாரங்கள்


வாழ்வை வளமாக்கும் எளிய பரிகாரங்கள்
x

அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் நாம், ஒரு சில எளிய பரிகாரங்களை செய்தாலே, நம்முடைய வாழ்கை வளமுடன் அமையும். அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

* சிவன் கோவிலில் தல விருட்சமாக அமைந்த வில்வ மரம் மற்றும் வன்னி மரத்தை, 21 முறை வலம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்தால், இனிமையான வாழ்வு அமையும்.

* இரண்டு நாகங்கள் இணைந்தது போல் வடிக்கப்பட்டிருக்கும் நாகர் சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30 முதல் 12 மணி வரை), மஞ்சள், குங்குமம் இட்டு, செவ்வரளி பூ சாற்றி, நெய்தீபம் ஏற்றுங்கள். பின்னர் இல்லத்தில் உள்ளவர் களின் பெயருக்கு அர்ச்சனை செய்தால், குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

* குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது ரிஷிகள் சொல்லிய எளிய பரிகாரங்களில் ஒன்று.

* அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் யோக நரசிம்மரையும், மற்ற கடன் பிரச்சினைக்கு லட்சுமிநரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமணத் தடை விலகும்.

* ஆலய திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட்டால் திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

* வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு பூஜை அறையில், கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து பூஜித்து வாருங்கள். சங்கடங்கள் ஏதும் இருந்தால் அவை விலகி ஓடும்.

* சக்கரத்தாழ்வார் சன்னிதியில் தொடர்ந்து 48 நாட்கள், நெய்தீபம் ஏற்றிவைத்து, 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், தொழில் பிரச்சினைகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். அதே போல் 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கொடுத்த கடன் வசூலாகும்.

* பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகள், நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால், கடன் பிரச்சினை படிப்படியாக குறையும்.

* சோமவாரமான திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து வாருங்கள். இதனால் சனி பகவானின் பாதிப்பு குறையும். சனீஸ்வரன் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள் முடிச்சு தீபம் ஏற்றினாலும் சனியின் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

* பிரதோஷ காலத்தில், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* தொடர்ச்சியாக 11 மாதங்கள், உத்திரம் நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்.

* ராகு காலத்தில் கடைசி அரை மணி நேரத்தை 'அமிர்தகடிகை நேரம்' என்பார்கள். இதுவே பரிகாரம் செய்ய சிறப்பான நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம் இது. ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.

* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் முன்பாக, தாமரை தண்டில் திரி போட்டு, நெய் விளக்கேற்றி வழிபட்டால், தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்.

1 More update

Next Story