சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Jan 2024 11:00 PM GMT (Updated: 19 Jan 2024 11:00 PM GMT)

அய்யா வைகுண்டசாமி விழாவில் 2-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், நாளை அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரித்தல், காலை 6.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குரு சுவாமி தலைமை தாங்கினார். கொடியை குரு ராஜசேகரன் ஏற்றி வைத்தார். குருமார்கள் தங்கபாண்டியன், ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து பள்ளியறை பணிவிடைகளை செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை மாவட்ட அய்யா வழிமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் அய்ய வைகுண்டர் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவில் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தருதல், அன்னதர்மம் நடக்கிறது.

விழாவின் 11-ம் நாளான 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேரோட்டமும், நள்ளிரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story