சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம்;
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திரம்
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சாமி கோவில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு இணையான 3-வது வைணவ கோவில் ஆகும். இந்தகோவிலில் ஆண்டுதோறும் கோமளவல்லித் தாயார் பங்குனி உத்திர பிற்மோற்சவமும், பெருமாள்-தாயார் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்தின் முன் கோமளவல்லித் தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கொடியேற்றம்
தொடர்ந்து கோவிலின் உள்ளே உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று இரவு கோமளவல்லி தாயார் தங்க மங்களகிரியில் புறப்பாடு நடைபெற்றது.ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் தாயார் புறப்பாடு நடைபெறுகிறது. பங்குனி உத்திர தினமான ஏப்ரல் 5-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் வெள்ளி ரதத்தில் உள்பிரகாரத் தேரோட்டமும், மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு சித்திரைத் தேரோட்டத்தை யொட்டி, சித்திரைத் தேருக்குப் பந்தக்கால் முகூர்த்தமும், இரவு 8 மணிக்கு பெருமாள் பொற்றாமரை குளத்தில் பிரதட்சணமும், சக்கரத்தாழ்வார், சக்கரவர்த்தி திருமகனுடன் எழுந்தருளி, தாயார் சன்னதிக்கு எதிரில் பெருமாள்-தாயார் மாலை மாற்றி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






