சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பிரமாண்ட அன்னதான விழா


சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பிரமாண்ட அன்னதான விழா
x

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பிரமாண்ட அன்னதான விழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பிரமாண்ட அன்னதான விழா நடந்தது.

சித்தர் முத்துவடுகநாதர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று பால்குடம் மற்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-ம் ஆண்டாக பிரமாண்ட அன்னதான விழா நடந்தது. இதையொட்டி சித்தருக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், சந்தனம், விபூதி போன்ற 36 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் சந்தன காப்பு மலர் மாலைகளுடன் சித்தர் அருள் பாலித்தார்.

அன்னதானம்

தொடர்ந்து கோவில் முன்பு அன்னதான மண்டபத்தின் கலை அரங்கில் மலை போல குவித்து வைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு தலை வாழை இலை போட்டு 4 வகை காய்கறிகளுடன் உணவு பரிமாறப்பட்டது. இந்த விழாவில் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி வணிகர் நலச்சங்கம் மற்றும் பதினெட்டாம் பெருக்கு அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.

பக்தர்கள்

இதே போல் வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அன்னதான விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் கோவில் முன்பு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி பாரதி நகரில் உள்ள நொண்டி கருப்பர் கோவிலில் நடந்த ஆடிப்பெருக்கு அன்னதான விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story