ராமனின் காலடி பதிந்த புனித இடங்கள்


ராமனின் காலடி பதிந்த புனித இடங்கள்
x

பாரத தேசத்தின் பெரும் பகுதிகளில் ராமரின் காலடி பதிந்திருக்கலாம் என்பதே, நம்முடைய பெரும் பாக்கியம்தான். அப்படி ராமபிரானின் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் சில முக்கிய பகுதிகளை இங்கே பார்க்கலாம்.

இந்த பூமியில் காடுகளும், மலைகளும், நதிகளும் இருக்கும் வரை, இந்த மண்ணின் மக்களிடம் ராமாயணம் நிலைத்து நிற்கும். அயோத்தியில் பிறந்த ராமர், 14 ஆண்டுகள் வனவாசமாக காட்டிற்குள் நுழைந்தார். அவர் காட்டின் பல இடங்களுக்கு பயணித்தார். ஒரு கட்டத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்றதன் விளைவாக, அவர் பாரத தேசத்தின் தென்பகுதியில் உள்ள வனத்திற்குள்ளும் பயணிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. அங்கிருந்து சேது சமுத்திரத்தில் பாலம் அமைத்து இலங்கை சென்றார். இவ்வளவு இடங்களையும் அவர் நடந்தே கடந்தார் என்பதுதான், இங்கே நாம் கவனிக்க வேண்டியது. அப்படியானால் பாரத தேசத்தின் பெரும் பகுதிகளில் ராமரின் காலடி பதிந்திருக்கலாம் என்பதே, நம்முடைய பெரும் பாக்கியம்தான். அப்படி ராமபிரானின் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் சில முக்கிய பகுதிகளை இங்கே பார்க்கலாம்.

அயோத்தி

ராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இந்த இடம்தான், ராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும், 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, அவர் அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்ததும் இந்த இடம்தான். தமிழில் ராமாயணத்தை எழுதிய கம்பர், வடநாட்டில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர், மகாத்மாகாந்தி போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த, ராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.

வாரணாசியில் இருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, அயோத்தி. வாரணாசியில் இருந்து லக்னோ செல்லும் ரெயில் மார்க்கத்தில் இருக்கிறது அயோத்தி ரெயில் நிலையம்.

பக்ஸர்

விஸ்வாமித்திரர், தன்னுடைய யாகத்திற்கு இடையூறாக இருக்கும் தாடகையை அழிப்பதற்காக ராமரையும், லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் பலை, அதிபலை என்ற முக்கியமான இரண்டு மந்திரங்களை உபதேசித்த இடம் இதுவாகும். 'சித்தாசிரமம்', 'வேத சிரா', 'வேத கர்ப்பா', 'க்ருஷ்' என்று வேறு பெயர்களாலும் இந்த இடம் அழைக்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து மொகல்சராய் செல்லும் ரெயில் மார்க்கத்தில் முக்கியமான ரெயில்நிலையம், பக்ஸர்.

அகல்யாசிரமம்

கவுதம முனிவரின் மனைவி அகலிகை. இவள் மீது தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஆசை இருந்தது. இதனால் கவுதம முனிவர் இல்லாத நேரத்தில், அவரது தோற்றத்தில் அகலிகையிடம் நெருங்கினான் இந்திரன். அந்த நேரத்தில் தன் குடிலுக்கு திரும்பிய கவுதமர், இந்திரனுக்கு கொடும் சாபம் கொடுத்தார். அதோடு கணவனை உணர்ந்து கொள்ளாதவள் என்று குற்றம் சாட்டி, அகலிகைக்கும் கல்லாக மாறும் சாபத்தை அளித்தார். பல நூறு ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகலிகை, காட்டிற்குள் வனவாசம் வந்த ராமரின் காலடி பட்டு, சாப விமோசனம் பெற்றாள். அந்த இடம் இதுவாகும். சீதாமடி-தர்பங்கா ரெயில் மார்க்கத்தில், கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி, மேற்கே 15 மைல் தொலைவு சென்றால் அஹியாரி என்ற இடம் உள்ளது. இங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அகல்யா குண்ட் என்ற, அகல்யாசிரமம் உள்ளது.

ஜனக்பூர்

மிதிலை நாட்டை ஆண்ட ஜனகரின், அரசாட்சி நடைபெற்ற இடம் இந்த ஜனக்பூர். இங்கிருந்த பெரிய மைதானத்தில்தான், சீதையை மணப்பதற்காக சிவ தனுசை ராமர் முறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீதாமடி என்ற இடத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஜனக்பூர் உள்ளது.

வால்மீகி ஆசிரமம்

பெரும் வழிப்பறி கொள்ளையனாக இருந்து, பின் மனம் மாறி ராமபிரானின் காவியத்தை எழுதிய வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம் இதுவாகும். பிரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது. மேலும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடூரில் உள்ள கங்கை கரையிலும், சீதாமடி அருகேயும் வால்மீகி முனிவர் வசித்ததாக சொல்லப்படுகிறது.

சித்திரக்கூடம்

ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, சீதை மற்றும் லட்சுமணனுடன் இந்த சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் ஆகிய ரிஷி பெருமக்களுடன் ராமரும் தவம் இயற்றியதாக ராமாணயம் சொல்கிறது. அமாவாசை, பவுர்ணமி, தீபாவளி, மகரசங்கராந்தி, ராமநவமி போன்ற நாட்களில் சித்திரக்கூடத்தில் மக்கள், பெரும் கூட்டமாக சேர்ந்து, இங்கு பாயும் மந்தாகினி ஆற்றில் புனித நீராடி ராமபிரானை வழிபடுவது வழக்கம். அலகாபாத்தில் இருந்து ஜபல்பூர் செல்லும் ரெயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சித்திரக்கூடம் ரெயில் நிலையத்தில் இறங்கி இந்த பகுதிக்குச் செல்லலாம்.

ராம்டேக்

'டேகரி' என்றால் சிறிய மலை என்று பொருள். 'டேக்' என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்றும் பொருள்படும். இது 'ராமகிரி' என்றும் அழைக்கப்படுகிறது. வனவாசனத்தின் போது, ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனர். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் வழியில் தும்பர் என்ற கிராமம் உள்ளது. இதன் அருகில்தான், இந்த ராம்டேக் இருக்கிறது. இது நாக்பூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பஞ்சவடி

ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக முக்கியமான இடம். அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த ராமபிரான், சில முனிவர்களின் வேண்டுகோள்படி ஓரிடத்தில் தங்க சம்மதிக்கிறார். அது ஐந்து ஆலமரக்கூட்டம் இருக்கும் இடம். அதனால் அது 'பஞ்சவடி' என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்துதான் சீதையை, ராவணன் கடத்திச் சென்றான் என்று ராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திரயம்பகேஸ்வரம் என்ற இடத்தில் இருந்துதான் கோதாவரி நதி தோன்றுகிறது. மும்பையில் இருந்து புசாவல் செல்லும் ரெயில் தடத்தில், நாசிக் ரோட் என்ற பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சவடி இருக்கிறது.

சபரி ஆசிரமம்

சபரி என்ற மூதாட்டியின் பக்திக்காக, அவள் எச்சில்படுத்திக் கொடுத்த கனியைக் கூட அன்போடு ராமபிரான் சுவைத்து சாப்பிட்ட இடம் இதுவாகும். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் பிரசித்தி பெற்ற புராதன நகரம், ஹம்பி. இந்நகரின் மத்தியில் விருபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி பாய்கிறது. இதை 'சக்கர தீர்த்தம்' என்றும் சொல்வர். இதன் அருகே உள்ள மலையில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இந்த மலை 'மதங்க பர்வதம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மதங்க மாமுனிவர் வசித்து வந்தார். இவர் ஆசிரமத்திற்கு அருகேதான் சபரி வசித்து வந்ததாக ராமாயணம் வர்ணிக்கிறது.

கிஷ்கிந்தா

வாலியும், அவன் இறந்த பிறகு சுக்ரீவனும் அரசாட்சி செய்த வானர நகரம் இதுவாகும். கர்நாடகத்தில் இருந்து ஹூப்ளி - கதக் - பெல்லாரி ரெயில் வழித்தடத்தில் அமைந்த முக்கியமான ரெயில் நிலையம், ஹான்ஸ்பேட். இது பெல்லாரியிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஹூப்ளியில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவிலும், கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. ஹம்பியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹான்ஸ்பேட் என்ற இடத்தின் அருகேதான், கிஷ்கிந்தா ராஜ்யம் அமைந்திருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம்

ராமபிரான் இங்கிருந்துதான், இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்தார். பின்னர் வெற்றிக்கொடி நாட்டி திரும்பியதும், இங்குள்ள மணலில் சிவலிங்கம் ஒன்றை செய்து வழிபட்டார். அந்த மணல் லிங்கம்தான், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவிலின் மூலவராக இன்றளவும் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது. ராமேஸ்வரத்திற்கு மதுரையில் இருந்தும், சென்னையில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரெயில், பஸ்வசதி உள்ளது.

1 More update

Next Story