திருவாசகத்தை தாங்கி நிற்கும் அரண்மனை


திருவாசகத்தை தாங்கி நிற்கும் அரண்மனை
x

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்தோங்கும் மண்ணாக விளங்குகிறது. இந்த யாழ்ப்பாண நகரத்திற்குள் நம்மை வரவேற்கும் பகுதியாக நாவற்குழி என்ற இடம் இருக்கிறது. நீர் ஏரிகளும், பனைமரக்காடுகளுமாக காட்சி தரும் இந்த இடத்தில், சிவபூமி என்ற பெயரிலான ‘திருவாசக அரண்மனை’ ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இதில், திருக்கோவிலும் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவராக தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இலங்கையில் மூலவராக தட்சிணாமூர்த்தி அமைந்த ஆலயம் இது ஒன்றுதான். இந்த ஆலயத்தின் ஐந்தடுக்கு விமானத்தில், சிவலிங்கங்கள் பல காட்சி தருகின்றன. தட்சிணாமூர்த்தி சன்னிதியின் முன்பாக 21 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன தேர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் மீது லிங்க வடிவில் சிவபெருமானும், அவருக்கு அருகில் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். தேரின் முன்பாக கருங்கல்லால் ஆன நந்தி சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஆலய அரண்மனையின் இரு மருங்கிலும், 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதன் அருகில் உள்ள சுவர்களில், கருங்கல்லில் செதுக்கி பதிக்கப்பட்ட திருவாசகப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 108 சிவலிங்கத்தின் மேற்பகுதியிலும், சிவலிங்கத்திற்கு ஒன்றாக ஒரு மணி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் அடியார்கள், இந்த மணியோசையை எழுப்பி, இறைவனுக்கு அபிஷேகம் செய்து தாங்களே வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மாணிக்கவாசகரால் உருவாக்கப்பட்ட திருவாசக பாடல்களை, 'சிவபுராணம்' என்றும் அழைப்பார்கள். 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய இந்த நூலில் 658 பாடல்கள் இருக்கின்றன. இவை அனைத்தும், தமிழ், மலையாளம், கன்னடம், சிங்களம், அரேபியம், ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் இங்கு செதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு செதுக்கியுள்ளார்.

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த திருவாசகத்தை பெருமைப்படுத்தும் வகையில், அதற்காக அரண்மனை போன்ற வடிவில் ஒரு ஆலயம் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. இங்கு திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையம், யாத்ரிகர்கள் தங்கும் அறை, அர்ச்சகர் அறை, களஞ்சிய சாலை, பாகசாலை போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


Next Story