பங்குனி பிரம்மோற்சவம்: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் கொடியேற்றம்


பங்குனி பிரம்மோற்சவம்: திருக்குறுங்குடி  அழகிய நம்பிராயர்  கோவிலில் கொடியேற்றம்
x

விழாவில் தினசரி யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அழகிய நம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா இன்று ( திங்கட்கிழமை)தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அழகிய நம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவை முன்னிட்டு தினசரி யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகிய நம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5-ம் நாளான 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர், மறுநாள் அதிகாலையில் நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் திருநாளான ஏப்ரல் 3-ம் தேதி (புதன் கிழமை) நடக்கிறது.

1 More update

Next Story