காரைக்குடி: கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு


காரைக்குடி: கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு
x

காரைக்குடி அருகே கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு கோலாகலமாக நடைபெற்றது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் ஸ்ரீ உசுலாவடி கருப்பர் மற்றும் நாச்சியமத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2ஆண்டுகள் கொரோனா தடை காரணமாக இந்த மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை. இருப்பினும் இந்தாண்டு மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த மெய்யப்பன் மனு தாக்கல் செய்தார்.

நீதி மன்ற உத்தரவின் பேரில் இன்று காலை 10.30 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு தொடங்கியது. போட்டியில் மொத்தம் 15 காளைகள் பங்கேற்றன. 9 பேர் கொண்ட மாடு பிடி வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டது.

இதில் ஆரம்பத்தில் இறங்கிய காளைகள் குறைந்த நேரத்திலேயே மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் அண்டா, சில்வர் குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.


Next Story