மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை


மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை
x

கோப்புப்படம் 

வலியபடுக்கை பூஜையை காண குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசி பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடந்து வருகிறது. இந்த நிலையில் 5-ம் நாளான இன்று காலை 4.30 மணிக்கு திருடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சபூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது.

மாசிக்கொடையின் முக்கிய வழிபாடாகிய மகா பூஜை என்னும் வலியபடுக்கை பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு நடக்கிறது. வலியபடுக்கை பூஜை நள்ளிரவு அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு பதார்த்தங்கள், பழ வகைகள், இனிப்பு வகைகள் அம்மன் முன் பெரும் படையலாக படைத்து வழிபடுவதாகும். வலியபடுக்கை பூஜை முடிந்து இந்த படையல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த வலியபடுக்கை மாசிக்கொடையின் 6-ம் நாளன்றும், மீனபரணிக்கொடை அன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் வருடத்திற்கு 3 நாட்கள் மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இந்த பூஜையில் கலந்துகொள்வார்கள். இப்பூஜையை காண குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


Next Story