சகல சவுபாக்கியம் நல்கும் வரலட்சுமி நோன்பு


சகல சவுபாக்கியம் நல்கும் வரலட்சுமி நோன்பு
x

குடும்பம் வளமுடன் திகழவும், மக்கள் செல்வம் மிகுந்து மகிழ்ச்சி காணவும், பல விரதங்களை நம் முன்னோர்களும், ரிஷிகளும், மகான்களும் ஏற்படுத்தி உள்ளனர். அவற்றில் அனைத்து பெண்களாலும் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றுதான் வரலட்சுமி நோன்பு.

ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் விரும்பும் வரங்களை லட்சுமி தேவி தருவார் என்பதால், இவ்விரதம் 'வரலட்சுமி விரதம்' என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்துப் பெண்கள் விரும்பி கடைப்பிடிக்கும் விரதமாகவும், மாங்கல்ய பலம் மற்றும் சகல சவுபாக்கியங்களுக்காக சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் முக்கியமான விரதமாகவும் இது இருக்கிறது.

மகத தேசத்தில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். பதி விரதையான அவளது கணவன், உஞ்சவிருத்தி மூலம் கொண்டு வரும் அரிசியை சமைத்து குடும்பம் நடத்தி வந்தாள். தன் கணவரையும், அவரின் பெற்றோரையும் பணிவுடன் போற்றினாள். அதிகாலையில் எழுந்து அனைத்து பணிகளையும் முடித்து, குடும்பத்தை அமைதியாக நடத்தி வந்தாள்.சாருமதியிடம் கருணைகொண்ட வரலட்சுமி தேவி, அவளுக்கு அனுக்கிரகம் செய்ய நினைத்து அவளது கனவில் தோன்றினாள். "சாருமதி.. உன் பக்தியால் மகிழ்ந்து உனக்காக நான் வந்திருக்கிறேன். நீ ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் என்னைப் பூஜித்தால், உன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என்று கூறினார். உடனே சாருமதி கனவிலேயே வரலட்சுமிதேவியை வலம் வந்து, தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட்டாள். பின்னர் வரலட்சுமி தேவியை வழிபடும் முறைகளைப் பற்றியும், தாயாரிடமே கேட்டு தெரிந்துகொண்டாள் சாருமதி. அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டு, வரலட்சுமி தேவி மறைய, கண் விழித்துப் பார்த்த சாருமதி அனைத்தும் கனவு என்பதை உணர்ந்தாள்.

பின்னர் தான் கனவில் கண்ட விரதத்தைப் பற்றி கணவன், மாமனார், மாமியார் ஆகியோரிடம் கூறினாள். அவர்களும் மகிழ்ந்து, "நீ கனவில் கண்ட அந்த மிக உன்னதமான விரதத்தை அவசியம் வீட்டில் நடத்த வேண்டும்" என்று கூறினர். இதற்கிடையில் வரலட்சுமிதேவியால் சொல்லப்பட்ட குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. இதையடுத்து சாருமதியும், அவள் வீட்டில் உள்ளவர்களும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைஅதிகாலையில் எழுந்து நீராடி, புதிய வஸ்திரங்களை அணிந்து கொண்டு, பூஜை செய்யத் தேவையான பொருட்களை சேகரித்தனர்.

சாருமதி வீட்டில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு மெழுகி கோலமிட்டாள். வரலட்சுமிதேவி அமர ஒரு மண்டபம் அமைத்தாள். வண்ணப் பொடிகளால் பத்மங்களைப் போன்று கோலமிட்டு அழகுபடுத்தினாள். அதன் மீது ஒரு நுனி வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, பித்தளை செம்பில் சுண்ணாம்பு தடவி, அதன் மேலே மாவிலைக் கொத்து வைத்து, உச்சியில் தேங்காய் வைத்து அதை கலசமாக்கினாள். கலசத்தின் மீது அம்மன் முகம் பதித்தாள். அருகில் குத்துவிளக்கேற்றி வைத்தாள். கலசத்தை மலர் மாலைகளால் அலங்கரித்தாள். பிறகு, கலசத்தில் வரலட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து, சாருமதியும், அவள் வீட்டிற்கு வந்திருந்த மற்ற பெண்களும் பயபக்தியுடன் வரலட்சுமியை பிரார்த்தனை செய்தனர்.

'பத்மாஸநே, பத்மகராம்

ஸர்வலோக பூஜிதே

நாராயணப்ரியே தேவி

ஸுப்ரி தாப்பவ ஸர்வதா'

என்ற லட்சுமி சுலோகத்தால் வரலட்சுமிதேவியை பிரார்த்தித்து, 16 வகையான உபசார பூஜைகள் செய்து, ஒன்பது முடிபோட்ட மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக் கொண்டனர். வரலட்சுமிக்கு ஒன்பது வகையான நைவேத்தியம் படைத்து, கற்பூர தீபம் காட்டி வலம் வந்து வழிபட்டனர். அவர்கள் ஒரு முறை வரலட்சுமியை வலம் வந்ததும், சாருமதி மற்றும் அங்கிருந்த பெண்களின் கால்களில் 'கலகல' என்ற ஓசை உண்டானது. அவர்கள்

கால்களைப் பார்த்தபோது, அதில் மெட்டி, கொலுசு போன்ற ஆபரணங்கள் மின்னின. இரண்டாவது முறை வலம் வந்தபோது, அந்த பெண்களின் கரங்களில் தங்கத்தால் ஆன பலவிதமான வளையல்கள் தோன்றி கலகலத்தன. மூன்றாவது முறை வலம் வந்ததும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், பட்டுப்புடவை உள்ளிட்ட மதிப்புமிக்க வஸ்திரங்கள் தோன்றின. அதோடு சாருமதி மற்றும் பூஜையில் பங்கேற்ற பெண்களின் வீடுகள் அனைத்தும் மாட மாளிகையாக மாறின.

மேற்கண்ட கதையை பார்வதிதேவிக்கு, பரமேஸ்வரன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ``இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், சகல சவுபாக்கியங்களுடன் நெடுங்காலம் நோய் நொடி இன்றி வாழ்வார்கள் என்பது திண்ணம்" என்றார். இந்த வரலட்சுமி பூஜையை ஆண்டு தோறும் இடைவிடாமல் பெண்கள் அனைவரும் செய்து வரவேண்டும். மாதவிலக்கு போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்படும் வேளையில், அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை செய்யலாம்.

விரதம் இருப்பது எப்படி..

வரலட்சுமிதேவியை நம் இல்லத்திற்கு வரவழைக்க வெள்ளிக்கிழமைக்கு முன் தினம், வீட்டின் வாசல்படியிலும், பூஜை செய்யும் இடத்திலும் பசுஞ்சாணத்தால் மெழுகி கோலமிட வேண்டும். சுவரில் வெள்ளையடித்து வரலட்சுமியின் உருவத்தை வரைய வேண்டும். மாலையில் தீபம் ஏற்றுவதற்கு முன் பூஜை அறையில் மண்டபமோ, விதானமோ அமைத்து அலங்கரிக்க வேண்டும். வரலட்சுமியை ஆவாஹனம் செய்யும் கலசம், தங்கம், வெள்ளி அல்லது தாமிரம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த கலசத்திற்குள் பச்சரிசி அல்லது சுத்தமான நீரை நிரப்பிக்கொள்ள வேண்டும். மேலும் எலுமிச்சைப் பழம், முழு நாணயம், வெற்றிலை-பாக்கு, தங்க ஆபரணத்தில் ஏதாவது ஒன்றை அதற்குள் போட வேண்டும். கலசத்தின் மீது கட்டப்படும் மாவிலை கொத்து, விளிம்பின் நான்கு பக்கமும் நீட்டி கொண்டிருக்கும்படி அமைக்க வேண்டும். அதன் உச்சியில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து, அதில் சந்தனம், குங்குமம் இட்டு, புஷ்பத்தால் அலங்கரிக்க வேண்டும். அதன் மேல் அம்பாளின் முக வடிவத்தை வைக்க வேண்டும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில், அலங்கரித்த மண்டபத்தில் நுனி வாழை இலை போட்டு, நெல் பரப்பி, அதன் மேல் ஒரு தாம்பாளம் வைக்க வேண்டும். அந்த தாம்பாளத்தில் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பச்சரிசி பரப்பி, அதன் மீது அலங்கரிக்கப்பட்ட கலசத்தை வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், இட்லி, உளுந்துவடை, வெல்ல கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, பருப்பு பாயசம், வெல்ல அப்பம், சர்க்கரைப் பொங்கல், தேங்காய் ஆகியவற்றை நிதேவனம் செய்ய வேண்டும். பின்னர் கற்பூர ஆராதனை காண்பித்து வரலட்சுமி தேவியை வரவேற்கும் பாவனையில் அழைத்து வரவேண்டும்.

வெள்ளிக்கிழமை காலையில் 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் இருப்பதால், அதற்குள் பூஜையை தொடங்கிவிட வேண்டும். ராகுகாலத்துக்கு முன்பாக கலசத்தை மங்கல வாத்தியங்களுடன் வாசலில் இருந்து அலங்கார மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். நாம் தொடங்கும் வரலட்சுமி பூஜை தடையின்றி நடைபெற இந்த வழிபாடு அவசியம். அதன்பிறகே வரலட்சுமியை பூஜை செய்து வணங்க வேண்டும். பூஜையின் முடிவில் வலது கையில் ஒன்பது முடிச்சுடன் கூடிய கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். பூஜையில் கலந்துகொண்ட மற்ற பெண்களுக்கும் கயிறு கட்டப்பட வேண்டும்.

கயிறு பூஜை மந்திரம்

வரலட்சுமி பூஜையில் மஞ்சள் தடவிய நூல்களில் 9 முடிச்சுகள் போட்டு மஞ்சள் கயிற்றை தயார் செய்ய வேண்டும். இதில் உள்ள ஒன்பது முடிச்சுகளும் அஷ்டலட்சுமிகளையும், வரலட்சுமியையும் குறிக்கும். அந்த கயிறை பூஜையில் வைத்து பூஜித்து, பூஜை முடிந்ததும் வலது கையில் அணிய வேண்டும். கயிற்றில் உள்ள 9 முடிச்சுக்களில் ஒவ்வொன்றையும் புஷ்பத்தால் பூஜிப்பதற்கான மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி

ஓம் ரமாயை நம: த்வீதீய க்ரந்திம் பூஜயாமி

ஓம் லோக மாத்ரே நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி

ஓம் விச்வ ஜநந்யை நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி

ஓம் மகாலட்சுமியை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி

ஓம் ட்ஷீராப்தி தநாயயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி

ஓம் விவ்வஸாட்ஷிண்யை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி

ஓம் சந்த்ரஸோதர்யை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமி

ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி

கயிறு கட்டிக்கொள்வதற்கான மந்திரம்

வீட்டில் பூஜை செய்யும் சுமங்கலி பெண்களும், திருமணமாகாத பெண்களும், பூஜை முடிந்தவுடன் வரலட்சுமி தேவிக்கு சமர்ப்பித்திருந்த ஒன்பது முடிச்சுகளிட்ட கயிற்றை, 'நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம் பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஸரிவல்லபே' என்ற மந்திரத்தை உச்சரித்து வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.


Next Story