மன பாரம் நீக்கும் பெயர்


மன பாரம் நீக்கும் பெயர்
x

தாயாரைச் சுமக்கும் பெருமாளின் நாமமான ‘பூகர்ப்பாய நமஹ’ என்று சொல்லி வழிபட்டால் மன பாரம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

மகாவிஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் (ஆயிரம் திருப்பெயர்கள்) ஒன்று, பூகர்ப்பாயர்' என்பதாகும். பூமாதேவியை தாங்கும் பெருமாளை இப்பெயரால் அழைப்பார்கள். சென்னை அருகே உள்ள கோவளத்தில் இருந்து 1 கிலோமீட்டரில் உள்ளது, திரு விடந்தை. இங்கு நித்ய கல்யாணப் பெருமாள், தனது மடியில் தாயாரை சுமந்தபடி இருப்பார்.

இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர், தினமும் குதிரையில் இந்த ஆலயத்திற்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் செல்வார். ஆலயத்திற்கு போகும்போது ஒரு குதிரையும், தரிசனம் முடிந்து அரண்மனை திரும்பும் போது ஒரு குதிரையும் பயன்படுத்துவார். ஏனெனில் குதிரையால் தன்னை நீண்ட நேரம் சுமக்க முடியாது என்பதால் அப்படிச் செய்வார்.

ஒரு முறை மன்னன், நித்ய கல்யாணப் பெருமாளை தரிசிக்கும்போது, "இறைவா.. எப்போதும் தாயாரை இடது கையால் தாங்கி நிற்கிறீரே.. உமக்கு வலிக்கவில்லையா?" என்று வருந்தினார்.

அப்போது இறைவன் அசரீரியாக, "தனக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு கருவுற்ற தாய் எப்படி குழந்தையை சுமக்கிறாளோ, அதுபோல தாயாரும் பூமியில் வாழும் உயிர்களை தாங்குகிறாள். அவளின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே, நானும் தாயாரைச் சுமந்தபடி இருக்கிறேன்" என்று விளக்கினார்.

தாயாரைச் சுமக்கும் பெருமாளின் நாமமான 'பூகர்ப்பாய நமஹ' என்று சொல்லி வழிபட்டால் மன பாரம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.


Next Story